என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீலகிரி
- கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
2021-ம் ஆண்டு நான் கவர்னராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தன. சில பிரச்சனைகளும் இருந்தன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன. அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது. இதனை சரி செய்து, ஒன்றிணைக்கவே இந்த மாநாடு மூன்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
புதிய தேசிய கல்வி கொள்கை தான் எதிர்காலம். நமது நாடு தற்போது பெரிய மாற்றத்திற்காக தயாராக உள்ளது. உலகம் வேகமாக மாறிவரும் நிலையில் நாம் பின் தங்கி உள்ளோம். சுதந்திரத்திற்கு பிறகு பொருளாதார நிலையில் 5-ம் இடத்தில் இருந்த நாம் 11-ம் இடத்திற்கு பின் தங்கிவிட்டோம். தற்போது 5-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளோம். விரைவில் 3-ம் இடத்திற்கு முன்னேற உள்ளோம்.
தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையேந்தும் நிலையில் உள்ளனர். கல்வி இளைஞர்களை திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும். ஆனால் அதை தவறவிட்டு விட்டோம். இது தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும். நாம் சுதந்திரத்திற்கு முன்பு உலகின் பெரும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருந்தோம். இதற்கு காரணம் அப்போது பின்பற்றப்பட்ட கல்வி கொள்கையாகும். கற்க கசடற கற்ற பின் நிற்க அதற்குத் தக என்ற திருவள்ளுவரின் கூற்றின்படி கல்வியாளர்கள் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். கற்கும் முறையை, பழைய கல்வி முறையை மாற்றிட புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகங்கள் நீண்ட நீடித்த கல்விக் கொள்கையை கொண்டு வர வேண்டும். புதிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன.
- அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களின் 2 நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டுக்கு கவர்னர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாநாட்டில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 48 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் பெரும்பாலான துணை வேந்தர்கள் பங்கேற்றனர். பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வுகளும், உரையாடல்களும் நடந்தன. மேலும் ஆராய்ச்சியின் சிறப்பம்சம், நிறுவன மேம்பாடு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், ஆசிரிய உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாடு, உலகளாவிய மனித விழுமி யங்களை ஊக்குவித்தல் போன்றவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
இன்றைய முதல் நாள் மாநாட்டில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வைத்திய சுப்பிரமணியம் எழுதிய நிறுவன மேம்பாட்டு திட்டம்- பல்கலைக்கழகங்களுக்கான தொலைநோக்கு ஆவணம், கட்டிட ஆராய்ச்சி சிறப்பு மற்றும் செயற்கை நுண்ண றிவு எதிர்காலம் குறித்து விளக்கப்பட்டது.
மாநாட்டில் பங்கேற்ற துணைவேந்தர்கள் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினர். யு.ஜி.சி. சி.ஐ.எஸ்.ஆர். தேர்வுகளில் தகுதி பெற்ற மற்றும் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பெற்ற மாணவர்கள், அறிஞர்கள் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.
மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என். ரவி நேற்றுமுன்தினம் மாலை ஊட்டிக்கு வந்தார். வருகிற 30-ந் தேதி வரை அவர் ஊட்டியில் தங்கியிருக்கிறார். மாநாடு நிறைவுக்கு பின் 29-ந் தேதி கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முனையை பார்வையிடுகிறார். பின்னர் 30-ந் தேதி ஊட்டியில் இருந்து சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.
- வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது.
- சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கொரவயல் பகுதியில் சின்னம்மா என்பவரது காபி தோட்டத்துக்குள் வீடு ஒன்று உள்ளது.
விவசாய நிலத்தில் உள்ள இந்த வீட்டை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். நேற்று மதியம் அங்கு பணியாற்றும் இடும்பன் என்ற தொழிலாளி வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து பதுங்கி இருந்தது. அதனை கண்டு இடும்பன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர் சிறுத்தை வெளியே வராமல் இருக்க கதவை பூட்டி விட்டு வெளியே ஓடி வந்தார். சக தொழிலாளர்களிடமும் தகவலை தெரிவித்து அவர்களை உஷார்படுத்தினார்.
இதுதொடர்பாக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பாதுகாப்பு உடைகள் அணிந்த வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் இருந்த சிறுத்தை வெளியே வர முடியாததால் ஆத்திரத்தில் உள்ளே கிடந்த இருக்கை உள்ளிட்ட பொருட்களை கடித்து குதறி நாசம் செய்தது.
தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இரவு 7.45 மணிக்கு சிறுத்தை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதனால் சிறுத்தை மயக்கம் அடை ந்தது. உடனடியாக கதவை திறந்து கொண்டு வனத்துறையினர் வீட்டுக்குள் சென்றனர்.
சிறுத்தையை மீட்டு அவர்கள் வனத்துறை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். நள்ளிரவில் சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து முதுமலை வனப்பகுதியில் கொண்டு போய் சிறுத்தையை வனத்துறையினர் விடுவித்தனர்.
வாகனத்தில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியே சென்ற சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக வனத்துறையினர் போராடி அந்த சிறுத்தையை பிடித்துள்ளனர். அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ராஜ்பவன் மாளிகை உள்ளது. இங்கு வருகிற 27 மற்றும் 28-ந்தேதி துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதற்காக இன்று அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நீலகிரிக்கு புறப்படும் அவர் சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்கிறார். ஊட்டி ராஜ்பவன் மாளிகைக்கு செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 48 பல்லைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்கின்றனர். துணை வேந்தர்கள் மாநாடு முடிந்ததும் கவர்னர் ஆர்.என்.ரவி 29-ந்தேதி கோத்தகிரி பகுதியை சுற்றி பார்க்க உள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரிக்கு வருவதையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியிலும் இன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
- சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
- பழ கண்காட்சியை கலெக்டர் அருணா தொட ங்கி வைத்து பார்வையிட்டார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவையொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, காய்கறி கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் ரோஜா கண்காட்சியும் தொடங்கி நடைபெற்றது. ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி நிறைவடைந்து விட்டது.
இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி தொடங்கியது. இதனையொட்டி பூங்கா முழுவதும், பல்வேறு வகையான பழ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக, பூங்காவின் நுழைவு வாயிலில் கண்காட்சியின் 64-வது ஆண்டை நினைவூட்டும் வகையில் ஆப்பிள், அன்னாசி, மாதுளை, வாழைப்பழம், பலாப்பழம், ஆரஞ்சு உள்பட அனைத்து வகை பழ வகைகளையும் கொண்டு நுழைவு வாயில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150-வது ஆண்டு ஆவதையொட்டி அதனை கொண்டாடும் விதமாக பூங்காவில் மாதுளை, டிராகன், ஆரஞ்சு பழங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சுற்றுலா பயணிகள், குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் பழ வகைகளை கொண்டு பல்வேறு வனவிலங்குகளின் உருவங்கள், கார்ட்டூன் பொம்மைகளும் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
சாத்துக்குடி, திராட்சை, ஸ்ட்ராபெரி பழங்களால் டைனோசர் உருவமும், எலுமிச்சை பழங்களை கொண்டு வாத்து உருவமும் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, பேரிச்சம் பழம், ஸ்ட்ராபெரி, முந்திரி பழங்களால் நத்தை உருவமும், பூசணிக்காய், மாம்பழங்களை கொண்டு கார்ட்டூன் உருவமும் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுமட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்காக பூங்காவில் 3.14 லட்சம் மலர் செடிகள் மலர் மாடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
மேலும் கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு ஸ்டால்கள், அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளூர் வியாபாரிகள் பல்வேறு வகையான பழங்கள், அரிய வகை பழங்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
பழ கண்காட்சியை கலெக்டர் அருணா தொடங்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சி தொடங்கியதை அடுத்து இன்று காலை முதலே குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள், பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர் செடிகளை கண்டு ரசித்தனர். மேலும் பூங்காவில் பல்வேறு பழங்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டிராகன், கிங்காங், முயல், வாத்து, டைனோசர் போன்ற உருவங்களை பார்த்து ரசித்தனர்.
குழந்தைகள் கார்ட்டூன் பொம்மைகள், வனவிலங்குகளின் உருவங்களை பார்த்ததும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியடைந்தனர். அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை பழங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். இன்று தொடங்கிய பழ கண்காட்சி வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.
கண்காட்சியை காண வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் குன்னூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் குன்னூர் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையால் பூங்கா அருகே உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியுள்ளது.
- சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன.
- கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த மழை கொட்டியது.
இதனால் ஊட்டி படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் தேங்கிய மழைநீரில் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்தபடியே சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. ஊட்டி நகரின் சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையான படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள இரும்பு பாலம் பகுதியில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
ஊட்டியில் இருந்து தூனேரி செல்லும் சாலையின் குறுக்கே சாலையோரம் நின்றிருந்த பெரிய மரம் மழைக்கு முறிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதேபோல் குன்னூர், எடப்பள்ளி, பாரஸ்டேல், பந்துமை உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கூடலூர் பகுதியிலும் நேற்று மழை பெய்தது. மழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப வழிகின்றன.
கூடலூரை அடுத்த இருவயல் பழங்குடியின கிராமத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அந்த கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர்.
தகவல் அறிந்த கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், அலுவலர்களுடன் அந்த கிராமத்திற்கு சென்று மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் வர மறுத்து விட்டனர்.
இதையடுத்து வருவாயத்துறையினர் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கிராமத்தை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், தொடர்ந்து கண்காணிப்பதாகவும் வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது.
- தொட்டபெட்டாவின் இயற்கை அழகை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடைவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும் நடந்து வருகிறது.
கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடைபெறும் ரோஜா கண்காட்சி ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள்.
அதனை தொடர்ந்து ஊட்டியில் உள்ள படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று சுற்றிப் பார்ப்பது வழக்கம்.
இந்த நிலையில் தொட்டபெட்டா மலைச் சிகரத்துக்குச் செல்லும் பகுதியில் வனத்துறை சாா்பில் சோதனைச் சாவடி அலுவலக கட்டுமான பணி தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக தொட்டபெட்டா மலைச்சிகரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தொட்டபெட்டா காட்சி முனை 7 நாட்களுக்குப் பின் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
தொட்டபெட்டாவில் விட்டு விட்டுப் பெய்யும் சாரல் மழை, அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் மேக மூட்டத்தால் நிலவும் குளிரில் இயற்கை அழகை பார்க்க இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
- பழ கண்காட்சியில் ஐந்து டன் எடையிலான ஆன பல்வேறு ரகங்களில் பழங்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நாளை (24-ந் தேதி) தொடங்குகிறது.
பழ கண்காட்சியையொட்டி ஏற்கனவே 3 லட்சத்து 14 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவை அனைத்தும் பூத்துக் குலுங்கி வருகின்றன. சால்வியா, குட்டி ரக மேரி கோல்ட், மேரி கோல்ட், டேலியா உள்ளிட்ட பல்வேறு வகை மலர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராக உள்ளது.
மேலும் இந்த முறை பூங்கா நுழைவாயில் இருந்து மினி படகு இல்லம் வரை மலர் தொட்டிகள் வைக்க ப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகையிலும் அரிய வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பழ கண்காட்சியில் ஐந்து டன் எடையிலான ஆன பல்வேறு ரகங்களில் பழங்கள் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மூலிகை வகை பழங்கள் மட்டுமல்லாமல், அடர்ந்த வனப் பகுதியில் கிடைக்கும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை பழங்களும் கண்காட்சியில் இடம் பெற உள்ளது. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் 150 கிலோ எடையில் பல்வேறு வகை பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.
குன்னூரில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பழ கண் காட்சிக்கு உண்டான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி பழ கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
நாளை தொடங்கும் பழக்கண்காட்சி வருகிற 26-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. கண்காட்சி காரணமாக மினி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
- மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன.
- மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரிக்கு தினமும் மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளுக்கு நடுவே செல்வதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம் என்பதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.
நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடந்த 18-ந் தேதி மலைரெயில் பாதையில் பாறைகள், மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 18-ந் தேதி தல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டது.
சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று மீண்டும் மலைரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில், மீண்டும் மழை பெய்ததால், மலைரெயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து இன்று ஒருநாள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படும் என சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மலைரெயிலில் பயணிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- ஊட்டியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
- சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா ஊட்டி தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சியுடன் மே 10 அன்று தொடங்கியது.
மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 2 லட்சம் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேல்டு, பல்வேறு அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்களும் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த மலர் கண்காட்சியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர்.
இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடைந்த நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கண்காட்சியை மேலும் 6 நாட்களுக்கு நீட்டித்து தோட்டக்கலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதனபடி 126வது மலர் கண்காட்சி மே 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- நீலகிரியில் கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
- இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக தினமும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு ரோஜா பூங்காவிலும் 19 ஆவது ரோஜா கண்காட்சி மே 10 அன்று தொடங்கியது. 1 லட்சத்திற்கும் மேலான ரோஜா மலர்களை கொண்டு ரோஜா பூங்காவில் பல வண்ண மலர்களை கொண்டு யானை, புலி, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகளின் உருவங்களும் வைக்கபட்டிருந்தன.
இந்த கண்காட்சியை இதுவரை 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர். 10 நாட்கள் நடைபெறும் ரோஜா கண்காட்சி இன்றுடன் முடிவந்தது.
இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மே 22 வரை ரோஜா கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
- கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது.
- தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவித்த நிலையில் கோடை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் கோடை வெயில் குறைந்து ரம்மியமான சூழல் நிலவியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, நீலகிரி, கொடைக்கானலுக்கும் பயணம் மேற்கொண்டனர்.
இதற்கிடையே தமிழகத்தில் 20-ந்தேதி வரை மிக கனமழை மற்றும் அதி கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்