search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அனல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மாவட்ட அளவில் வெயிலின் தாக்கம் மேலும் கூடுமென எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் அங்கு சூறாவளி காற்றுடன் கோடைமழை வெளுத்து வாங்கியது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மீண்டும் குளுகுளு காலநிலை தலை தூக்கியதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    கோத்தகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் இதமான காலநிலை நிலவியது. இந்த நிலையில் அங்கு நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது.

    இதனால் அங்குள்ள நீரூற்றுகள், கிணறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

    கோத்தகிரியில் கடும் வறட்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வந்த நிலையில் அங்கு சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் நீராதார பகுதிகளில் தண்ணீர் தேங்கி குடிநீர் பிரச்சினை தீருமென பொதுமக்கள் நிம்மதி தெரிவித்து உள்ளனர்.

    குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் லேம்ஸ்ராக் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த கார்கள் சேதம் அடைந்தன.

    ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் நேற்று மதியம் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் அங்கு வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் குறைந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. மேலும் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரை புரண்டோடியது.

    அதிலும் குறிப்பாக கமர்சியல் சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகனங்கள் செல்வதிலும் சிரமநிலை ஏற்பட்டது. அதே போல பஸ் நிலையம் அருகிலுள்ள ரெயில் பாலத்தின் அடியில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நின்றது.

    ஊட்டியில் கோடை விழா சீசன் தொடங்க உள்ள நிலையில் தாவரவியல் பூங்காவில் புல்வெளிகள் மீண்டும் பச்சைப்பசேல் பசுமைக்கு மாறி இருப்பதால் தோட்டகலை துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஊட்டி, குன்னூருக்கு குடிநீர் வழங்கும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் குன்னூர், அருவங்காடு, வெலிங்டன், காட்டேரி, சேலாஸ், கரும்பாலம், மரப்பாலம், அடார், சிங்காரா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கோடை மழையால் அந்த பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கோடை மழையில் நனைந்தபடி அங்குள்ள பகுதிகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே குன்னூரில் கோடை மழை காரணமாக அந்த பகுதிகளில் 6 முறை மின் தடை ஏற்பட்டது.

    மேலும் குன்னூர்-கோத்தகிரி சாலை அடுத்த வட்டப்பாறை பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்ததும் மின்ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் டால்பின் நோஸ்-லேம்ஸ்ராக் காட்சி முனைக்கு செல்லும் வழியில் ராட்சத மரம் முறிந்து விழுந்ததால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.
    • அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நீலகிரி ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்.

    ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது.

    இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

    அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது.
    • பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை (700மி.மி), அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை (300 மி.மி), ஏப்ரல்-மே மாதங்களில் கோடை மழை (250 மி.மி) வீதம் பெய்யும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    மேலும் அக்னி நட்சத்தி ரம் தொடங்குவதற்கு முன்பாகவே நீலகிரி பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக, சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதற்கிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரைமணிநேரம் கோடை மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் ஆறாக வழிந்தோடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீலகிரியில் வெளுத்து வாங்கிய கோடை மழையால் அங்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த அனல் வெப்பம் தணிந்து தற்போது மீண்டும் குளுகுளு காலநிலை திரும்பி உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் அவர்கள் கொட்டும் மழைக்கு மத்தி யில் பூங்காவில் குழந்தை களுடன் சேர்ந்து விளையாடி யதை காண முடிந்தது. ஊட்டி பகுதியில் நேற்று பகல் நேரத்தில் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், காற்றில் 73 சதவீதம் ஈரப்பதமும் நிலவியது.

    கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய 3 மாநில ங்கள் இணையும் கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பெய்த கோடை மழையால் அங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் வெயில்-புழுக்க த்தால் தவித்துவந்த மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் ஆகியோரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள்.
    • தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தை யொட்டிய மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருவ தால் அங்கு உள்ள காட்டு யானைகள் தற்போது வனத்தில் இருந்து வெளியேறி உணவு மற்றும் தண்ணீரை தேடி மலை அடிவார பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கே.என்.ஆா்.பகுதி க்கு 6 காட்டு யானைகள் வந்தன. அவை அங்குள்ள பாறைகளின் நடுவே தண்ணீர் கிடைக்கிறதா என தேடி பார்த்தன.

    அப்போது பாறைகளின் நடுவில் ஆங்காங்கே தேங்கிக் கிடந்த குட்டைகளில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சிக் குடித்தன. பின்னர் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி சூட்டை தணித்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் திரும்பி சென்றன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதியில் பாறை இடுக்குகளில் தண்ணீர் தேடும் யானைகள் குறித்து வனவியல் ஆய்வாளர்கள் கூறுகையில், `நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கான குடிநீா் தேவையும் அதிகரித்து உள்ளது.

    எனவே காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கோடைக்காலம் முடியும்வரை தண்ணீரை நிரப்பவும், குட்டைகளை கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார்.
    • அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதில் சிதலமடைந்து இருந்த சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு 72 லட்சம் ரூபாய் மற்றும் விநாயகர் கோவிலுக்கு 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தனது குடும்பத்தினருடன் குன்னூருக்கு வந்தார். அவரை தி.மு.க தொண்டர்கள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவர் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து பக்தர்களுக்கு வாழைப்பழங்களை பிரசாதமாக வழங்கினார். பின்னர் சுப்பிரமணியர் சுவாமி கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடப்பது குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவிலில் உள்ள திருமண மண்டபத்தை ஆய்வு செய்த அவர், மண்டபத்தை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்குவதாகவும், மேல் தலத்தில் அன்னதானத்திற்கான இடம் அமைத்தல் மற்றும் பார்க்கிங் வசதி செய்வதற்கான சிறப்பு நிதியை ஒதுக்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதியளித்தார்

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.
    • ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே மிக முக்கியமான சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டி உள்ளது.

    இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் கோடை சீசனை அனுபவிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கோடை சீசன் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், கோடை கால விடுமுறையை கொண்டாடவும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    இதேபோல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு ரசித்து செல்கிறார்கள்.

    மே தின விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 30-ந்தேதி முதலே சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்தனர். நேற்று காலையும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன், பஸ் போன்ற வாகனங்களில் ஊட்டிக்கு வந்தனர்.

    இதனால் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம் மற்றும் ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த மக்கள், அங்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளில் பூத்து குலுங்கிய பூக்களை கண்டு ரசித்து, அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    50 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். மாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் அங்குள்ள புல்தரையில் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி, குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்து பொழுதை கழித்தனர்.

    கடந்த 2 நாட்களில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து அதிகளவிலான சுற்றுலா வாகனங்கள் வந்து கொண்டே இருப்பதால், போக்குவரத்து பாதிக்காத வகையில் ஊட்டி நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோடை மழை பெய்யாத நிலையில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

    தற்போது காலதாமதமாக பூங்காவில் பசுமை திரும்பி, ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டிக்கு சுற்றுலா வந்த பயணிகள் ரோஜாபூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் பூக்களுடன் நின்று செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் வருகிற 10-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக ஒரு வாரத்துக்கு மட்டுமே மலர் கண்காட்சி நடத்தப்படும். முதன்முறையாக தற்போது 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து மலர் செடிகளையும், மலர்களையும் பாதுகாக்க பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது தண்ணீரை தெளித்து மலர்ச்செடிகளை பாதுகாத்து வருகிறார்கள்.

    • கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது.
    • 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும்.

    இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது மழை இல்லாத காரணத்தால் வனத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. கடும் வறட்சி நிலவுவதால் வனத்தில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் என அனைத்திலும் இலைகள் உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

    கடுமையான வெயில் நிலவி வருவதால் அவ்வப்போது வனப்பகுதிகளில் காட்டுத்தீயும் ஏற்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் தண்ணீரை கொண்டு அணைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதியில் உள்ள சீகூர் முதல் பெள்ளிமலை வரை உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    100 ஏக்கருக்கும் மேல் காட்டுத்தீ பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    இதேபோல் பெந்தட்டி வனப்பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட காட்டுத்தீ முதுமலை மசினகுடி வனக்கோட்டம், சிங்காரா வனச்சரகம், ஆணிக்கல் கோவில் அருகே கல்லஸ்கொம்பை வனப்பகுதிக்கு பரவி அங்கு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. 60க்கும் அதிகமான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சரிவான அந்த பகுதியில் புற்கள் காய்ந்து இருப்பதால் வனத்தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. எனினும் வன ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    • ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன.
    • இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா வந்த வண்ணம் இருப்பார்கள். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் கூட்டம் அலைமோதும்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வெயிலில் இருந்து தப்பிக்க இதமாக சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்னும் சில தினங்களில் நீலகிரியில் கோடைவிழாவும் தொடங்க உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஊட்டிக்கு சீசன் நேரங்களில் தினமும் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வந்து செல்கின்றன. இதன் காரணமாக எப்போதுமே நீலகிரியில் உள்ள அனைத்து சாலைகளிலுமே போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும்.

    அதிலும் குறிப்பாக ஊட்டி-மேட்டுப்பாளையம், கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, ஊட்டி நகர பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதையும் காண முடியும். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வருகிற 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல கொரோனா காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்ததை போன்று இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் என்னென்ன மாதிரியான நடைமுறைகளை கொண்டு வருவது என வருவாய்த்துறை, வனத்துறை, சுற்றுலாத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விரைவில் இ-பாஸ் நடைமுறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது. இதேபோல் இ-பாஸ் பெறுவதற்காக என்று தனியாக இணைய தளமும் தொடங்கப்பட்டும், அதுவும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.

    ஊட்டிக்கு செல்வோர் இ-பாஸ் எடுத்து வர வேண்டும் என்ற நடைமுறையானது உள்ளூர் மக்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

    மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகிறார்கள். கோடை சீசனில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இங்குள்ள அனைத்து சாலைகளிலுமே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் பொதுமக்களாகிய நாங்கள் அவரச தேவைக்கு எங்காவது புறப்பட்டால் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் வாகனங்கள் அதிகளவில் வருவதால், அதில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையானது இங்குள்ள இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    தற்போது ஐகோர்ட்டு அறிவித்துள்ள இந்த இ-பாஸ் நடைமுறையை நாங்கள் வரவேற்கிறோம். இதன் மூலம் நீலகிரிக்குள் ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது தெரியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    உள்ளூர் பொதுமக்கள் இ-பாஸ் நடைமுறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது நீலகிரியில் உள்ள வியாபாரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலாவை நம்பிதான் ஏராளமானோர் வியாபாரம் செய்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தால் தான் இவர்களுக்கு வியாபாரம் இருக்கும். இ-பாஸ் நடைமுறை என்று வரும்போது ஒரு நாளைக்கு இத்தனை பேர் செல்லலாம் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

    அதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை குறையும் நிலை உள்ளதாலும், அதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த விவகாரத்தில் அரசு, வியாபாரிகள் கருத்தையும் நலனில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டங்களை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர்.
    • தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

    ஊட்டி:

    கோடை மழை பெய்யாததால் நீலகிரி மாவட்டம் முழுவதுமே கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இதன் ஒரு பகுதியாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் நீர்நிலைகளை தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன. மேலும் முதுமலை புலிகள் காப்பகம் தற்போது வறண்டு காணப்படுகிறது. அங்கு பச்சைப்பசேல் பசுமையை பார்ப்பது அரிதாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள், தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கட்டிடம் கட்டுமான பணிகள் காரணமாக அங்குள்ள 4 பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், தெப்பக்காடு கும்கி யானைகளை பாகன்கள் தினமும் ஆற்றுக்கு அழைத்துச்சென்று குளிப்பாட்டி அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று கும்கி யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது தண்ணீரை கண்டதும் குதூகலம் அடைந்த யானைகள், ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தன.

    மேலும் அவை ஆழமான பகுதிகளுக்குள் சென்று, தும்பிக்கையால் தண்ணீரை உறிஞ்சி உடல் முழுவதும் வாரி இறைத்து உற்சாக குளியல் போட்டன. முதுமலை மாயார் ஆற்றுக்கு பாகனை சுமந்து வந்த யானை, ஆற்றுக்குள் இறங்கி ஆனந்த குளியல் போடுவது தொடர்பாக வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
    • நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவக்கூடிய மலைபிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பம், குடும்பமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை 39 ஆயிரத்து 23 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 23 ஆயிரத்து 78 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது. இதேபோல் காட்டேரி பூங்காவுக்கு 1,011 பேரும், தேயிலை பூங்காவுக்கு 1,100 பேரும், ரோஜா பூங்காவுக்கு 8 ஆயிரத்து 868 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 4 ஆயிரத்து 680 பேரும், மரவியல் பூங்காவுக்கு 286 பேரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். 

    • தமிழகம் முழுக்க இன்று 14 இடங்களில் வெயில் சதமடித்தது.
    • சென்னையில் இன்று 101 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் கத்திரி வெயில் துவங்காத நிலையில், வாட்டி வதைக்கும் வெப்பத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழகம் முழுக்க இன்று (ஏப்ரல் 28) 14 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107 டிகிரியும், சென்னையில் 101 டிகிரியும் பதிவாகியுள்ளது.

    மலை மாவட்டமும், சுற்றலா தளமுமான ஊட்டியில் இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பம் பதிவாகி உள்ளது. இன்று (ஏப்ரல் 28) உதகையில் வெப்பம் 29 செல்ஷியஸ் ஆக பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 5.4 டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும். 

    ×