search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
    • சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.
    • போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

    ஊட்டி:

    ஊட்டி அருகே எல்லநள்ளி, அட்டுகொலை கிராமத்தை சேர்ந்தவர் ரித்திக்.

    இவர் கேத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் அந்த பகுதியை சேர்ந்த கால்பந்து அணியில் விளையாடி வந்தார்.

    கடந்த ஆண்டு ரித்திக் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    ரித்திக்கின் உயிரிழப்பு அவரது பெற்றோர் மட்டுமின்றி, அவரது நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

    கால்பந்து போட்டியில் விளையாடும் போது, ரித்திக்கின் நினைவு சக வீரர்களுக்கு எப்போதும் அவர்களது மனதை வீட்டு நீங்கா வண்ணம் இருந்துள்ளது.

    தங்கள் ஆரூயிர் நண்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நண்பர்கள் முடிவு செய்தனர். அதன்படி நண்பருக்கு உருவசிலை செய்யும் யோசனை தோன்றியுள்ளது.

    இதையடுத்து ரித்திக்கின் மார்பளவு உருவசிலையை வடிவமைத்து வாங்கினர். இதனை அவரது தாயிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    அதன்படி அட்டுகொல்லை கிராமத்தில் ஏ.டி.கே. கால்பந்து அணி சார்பில் கால்பந்து போட்டி நடந்தது.

    இந்த போட்டிக்கு ரித்திக்கின் தாயார் ரெஜினா மற்றும் சகோதரர் ஜான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

    போட்டியை காண வந்த அவர்களை, ரித்திக்கின் நண்பர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களின் முன்னிலையில், ரித்திக்கின் நண்பர்கள், ரித்திக்கின் தாய் ரெஜினாவிடம் நினைவு பரிசு வழங்கினர்.

    அதனை ஜான் திறந்து பார்த்த போது, அதில் ரித்திக்கின் மார்பளவு உருவ சிலை இருந்தது. இதை பார்த்ததும் ரெஜினா மற்றும் ஜான் இருவரும் கண்கலங்கினர். கண் கலங்கிய படியே தனது மகனின் உருவசிலை அளித்த நண்பர்களுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    விபத்தில் இறந்த நண்பருக்காக, சக நண்பர்கள் மார்பளவு சிலையை உருவாக்கி, அவரது பெற்றோரிடம் வழங்கிய இந்த செயலானது அங்கு கூடியிருந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர்.
    • யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம், கிரேக்மோர் உள்ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் அவை காட்டுக்குள் செல்லாமல், தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளன. மேலும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நாக்குநெறி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து ருசி பார்த்தது. அந்த நேரத்தில் பழனியம்மாள் வீட்டில் எவரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பின்னர் அந்த காட்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக விழித்துக்கொண்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்றனர்.

    இதற்கிடையே கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கூட்டம் வழக்கம்போல் அருகே உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.

    எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மனுநீதிநாள் முகாம், வனத்துறை அலுவலகம் மட்டுமின்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனாலும் அந்த யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகளை கும்கிகள் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
    • ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    கோத்தகிரி:

    தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.

    இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.

    கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.

    அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.

    சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.

    இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.

    தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.

    கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.

    இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.

    3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.

    • ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார்.
    • அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று சசிகலா சென்றிருந்தார். அங்கு, பங்களா முன்பு ஜெயலலிதா சிலை வைக்க பூமி பூஜையில் பங்கேற்றார்.

    சசிகலா, கடைசியாக 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் இங்கே தங்கியிருந்தனர்.

    2017ல் இந்த பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்திற்கு பிறகும் சசிகலா இங்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சசிகலா இன்று கொடநாடு சென்றார்.

    அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது:-

    கொடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பார்க்க வந்தேன். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை!

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுத் தருவார் என நம்புகிறேன்.

    கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்குப் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்.

    அதிமுக ஒன்றுபடத் தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும்!

    அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.
    • சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த மாதங்களில் நீர்ப்பனிப்பொழிவு அதிகரித்து, பின்னர் உறைபனியின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டும்.

    இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் வரும் சில நாட்களில் அதிகமாக காணப்படும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதன்படி தற்போது ஊட்டியில் உறைபனி மற்றும் நீர்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி தீர்த்தது. இதனால் தாவரவியல் பூங்காவில் பிரதானமாக அமைந்து உள்ள புல்தரைகள் மற்றும் ஊட்டி குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் இருக்கும் புல்தரைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தற்போது வெள்ளை கம்பளி போர்த்தியது போல வெண்மையாக காட்சி அளிக்கிறது.

    மேலும் சாலையோரம் நிற்கும் கார், மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களின் இருக்கைகளில் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டியில் தற்போது வழக்கத்தை விட கடுங்குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் அங்கு இன்று காலை குறைந்தபட்ச அளவாக 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனியுடன் தற்போது கடுங்குளிரும் நிலவி வருவதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். இதனால் அவர்கள் வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

    பொங்கல் தொடர்விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்திருந்த பயணிகள், அதிகாலையில் நிலவும் கடுங்குளிரால், வெளியில் சென்று பார்க்க முடியாமல் விடுதிகளுக்குள் முடங்கி உள்ளனர். நீலகிரியில் உறைபனி கொட்டி தீர்த்து வருவதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து உள்ளது.

    • ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.
    • அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சுற்றுலா தலங்களான ஊட்டி, வால்பாறை பகுதிகளுக்கு அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    கடந்த 3 தினங்களாக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, லேம்ஸ்ராக் அணை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, முதுமலை புலிகள் காப்பகம், படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைன் பாரஸ்ட், தொட்ட பெட்டா மலைசிகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள், பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர்.

    தொடர்ந்து மலர்கள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.

    தங்கள் குழந்தைகளுடன் புல்வெளியில் ஆடி, பாடி, விளையாடியும் விடுமுறையை கொண்டாடினர்.


    ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்கின. அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    ஊட்டி படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
    • வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.

    இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.

    • ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகவும், அதிகளவில் சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    சுற்றுலா பயணிகள் அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கி, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பார்க், கோத்தகிரி நேரு பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பூங்காவில் வைக்கப்பட்டிருந்த மலர் செடிகளை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்குள்ள புல்வெளியில் அமர்ந்து குடும்பத்துடன் பேசி மகிழ்ந்தனர். தனது குழந்தைகளுடன் அங்கு விளையாடியும் மகிழ்ந்தனர். நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் 2 நாட்களில் 49,013 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 2 நாளில் 29 ஆயிரத்து 611 பேர் வந்துள்ளனர்.


    கடந்த 14-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 15,977 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 13 ஆயிரத்து 634 பேர் வந்திருந்தனர். கல்லாருக்கு நேற்று முன்தினம் 267 பேரும், நேற்று 910 பேரும் வந்தனர்.

    கல்லட்டிக்கு நேற்றுமுன்தினம் 719 பேரும், நேற்று 1,339 பேரும் வந்திருந்தனர். ரோஜா பூங்காவுக்கு நேற்றுமுன்தினம் 3,619 பேரும், நேற்று 4,783 பேரும், சிம்ஸ் பூங்காவுக்கு நேற்று முன்தினம் 2,360 பேரும், நேற்று 3,312 பேரும், தேயிலை பூங்காவுக்கு நேற்று முன்தினம் 792 பேரும், நேற்று, 1063 பேரும், அரோபிட்டத்திற்கு நேற்றுமுன்தினம் 117 பேரும், நேற்று 121 பேரும் வந்துள்ளனர்.

    தொடர்ந்து விடுமுறை உள்ளதால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் இன்னும் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது.
    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர்.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் தொடர்விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே வாரவிடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறை தொடர் விடுப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊட்டியில் குவிந்து அங்குள்ள பகுதிகளை உற்சாகமாக சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

    மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர். எனவே அங்கு தற்போது வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் அங்குள்ள சாக்லெட் கடைகளிலும் இனிப்பு பண்டங்களின் விற்பனை களைகட்டி வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு அணிவகுத்து வந்து செல்கின்றனர். எனவே நீலகிரி மாவட்ட எல்லையின் நுழைவு பகுதியான கக்கநல்லா சோதனைச்சாவடியில் இருந்து ஊட்டி வரை தெப்பகாடு மற்றும் மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் அந்தந்த பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
    • ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    புதுச்சேரி:

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

    வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்கள்-அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, நடிகைகள் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசைய மைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி றது.

    இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்த புரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

    2 நாட்கள் தொடர்ந்து அங்கேயே ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் படப்படிப்பு நடந்தது. அப்போது கோவில் வளாகம், தெப்பக்குளம் பகுதியில் படம் பிடிக்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரஜினிகாந்த் சிறிது நேரம் புத்தகம் படித்தும் தியானமும் செய்தார்.

    படப்பிடிப்பு முடிந்ததும் அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே ரஜினிகாந்த் பங்கேற்ற படப்பிடிப்பு குறித்த தகவலறிந்து அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

    படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த ரஜினிகாந்த் அவர்களை பார்த்து காரில் இருந்தபடியே கையசைத்து சென்றார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து தலைவா தலைவா என்று கூறி ஆரவாரம் செய்தனர்.

    • குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி உயரம் கொண்ட கற்பூர மரம் ஒன்று சாலையில் விழுந்தது.
    • குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மலை ரெயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரெயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதலே பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், தலைகுந்தா, பிங்கா்போஸ்ட், லவ்டேல், சாந்தூா், கேத்தி, பாலடா, கெரடா மட்டம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய மிதமான மழை பெய்தது.

    குறிப்பாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர்.

    கனமழைக்கு குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 100 அடி உயரம் கொண்ட கற்பூர மரம் ஒன்று சாலையில் விழுந்தது.

    இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் மின்சாரத்துறையினர் விழுந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். மேலும் ஜே.சி.பி. வரவழைக்கப்பட்டு மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு பிறகு மரங்கள் அகற்றப்பட்டு வாகனங்கள் இயக்கப்பட்டன.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே நேற்று மலை ரெயில் பாதையில் அடுத்தடுத்து மரங்கள் விழுந்ததால் மலை ரெயில் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரெயில், ஹில்குரோவ் பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்பு 50-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மரங்களை வெட்டி அகற்றினர்.

    இதனால் 2 மணி நேரம் தாமதமாக மலை ரெயில் குன்னூரை வந்தடைந்தது.

    இருந்த போதிலும் மீண்டும் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நாளை (வியாழக்கிழமை) வரை மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஊட்டி-குன்னூா் இடையேயான மலை ரெயில் வழக்கம்போல இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×