search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.

    இதையொட்டி சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் அம்பரோஸ் பகுதியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் நடமாட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    சிறுத்தையை பிடிக்க கூண்டுகளுடன் வனத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.

    இதையடுத்து கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.

    • சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார்.
    • இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், முள்ளன்வயல், அம்பலமூலா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஓட்டினார்.

    அய்யன்கொல்லி அருகே சாலையோரம் கைக்குழந்தையுடன் நின்றிருந்த இளம்பெண் ஒருவர் அந்த பஸ்சை நிறுத்துமாறு டிரைவரை நோக்கி கை காட்டினார். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் அய்யன்கொல்லிக்கு ஓட்டி சென்றார்.

    உடனே வாடகை வாகனத்தில் ஏறி அய்யன்கொல்லிக்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண், அங்கு நின்ற அந்த பஸ்சின் டிரைவரிடம், 'கைக்குழந்தையுடன் நின்று கை காட்டியும், ஏன் பஸ்சை நிறுத்தவில்லை' என்று கேட்டார். அதற்கு அவர், நான் கவனிக்கவில்லை என்று கூறியதோடு மீண்டும் அந்த இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.

    இதை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அறிந்த கூடலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி, டிரைவர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
    • கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

    மேங்கோ ரேஞ்ச் பகுதியில் குழந்தையை தாக்கி தேயிலை தோட்டத்திற்கு சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளது.

    பிறகு, படுகாயங்களுடன் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    ஏற்கனவே, 5 பேரை சிறுத்தை தாக்கிய நிலையில், தற்போது வடமாநில தொழிலாளியின் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ளது. இதனால், அங்கு பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை வலம் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

    • சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் முதல் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஒரு பெண் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, வனத்துறையினர் 5 இடங்களில் கூண்டு வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியும் சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    கூடலூர் அடுத்த கொளப்பள்ளியை சேவீர் மட்டத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 4 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். நேற்று சிறுமி, வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு புதர்மறைவில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென சிறுமியை தாக்கியது. இதில் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போட்டார்.

    அவரது சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள், சிறுத்தையை சத்தம் எழுப்பி அங்கிருந்து விரட்டினர்.

    தொடர்ந்து காயம் அடைந்த சிறுமியை மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பகுதியில் சிறுத்தை தொடர்ந்து அட்டசாகத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை பந்தலூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் பங்கேற்றனர்.

    • கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர்.
    • வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.

    இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இன்று இந்த வழக்கு நீதிபதி அப்துல்காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    விசாரணையின் போது சயான், வாளையார் மனோஜ், உதயகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகி இருந்தனர்.

    அப்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிஜின்குட்டி, திபு உள்ளிட்டோரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், கூடுதல் அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்காதர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை பிப்ரவரி 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆகியோரின் செல்போன், வாட்ஸ் அப் உரையாடல்களை ஆய்வு செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்குள்ள ஆய்வகத்தில் இவர்களின் பேச்சுக்கள், உரையாடல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அதில் கிடைக்கப்பெறும் தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் டி.எஸ்.பி.மாதவன் தலைமையிலான போலீசார் அகமதாபாத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

    இந்த உரையாடல்களில் பேசப்பட்டது என்ன என்பது தெரியவரும் பட்சத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும்.

    • தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.
    • கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

    அத்துடன் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் திரண்டு பகல் நேரமானது இரவு போல காட்சியளிக்கின்றன.

    கடந்த 2 தினங்களாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிதோஷ்ண நிலை மாறி காணப்படுகிறது. அடிக்கடி உறைபனி, பனிப்பொழிவு, மேகமூட்டம் என மாறி மாறி வருவதால் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.

    நேற்று மதியத்திற்கு பிறகு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மூடு பனி நிலவியது. அத்துடன் சாரல் மழையும் பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.

    மூடுபனி நிலவியதால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் உள்ள சாலைகளில் வரக்கூடிய எந்த வாகனமும் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே வந்தனர்.

    தேயிலை தோட்டங்கள், குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூடுபனியால் இருளாகவே காட்சியளித்தது.

    மக்களும் அருகில் வந்து, தான் தங்களுக்கு எதிரில் யார் வருகின்றனர் என்பதையே பார்க்க வேண்டி உள்ளது.

    அத்துடன் ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மூடுபனியுடன் உறைபனியும் சேர்த்து கொட்ட தொடங்கியது. வீடுகள் முன்பு வைத்திருந்த பொருட்கள், வாகனங்கள் மீது உறைபனி படர்ந்து விழுந்தது. அதனை காலையில் பொதுமக்கள் அகற்றி தங்கள் வேலைகளை தொடங்கினர். தொடர்ந்து மாறி மாறி வரும் சீதோஷ்ண நிலையால் நீலகிரியில் கடுமையான குளிரும் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இன்று காலை 8 மணியை தாண்டியும் குளிர் நிலவி கொண்டிருக்கிறது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சுவர்ட்டர், குல்லா அணிந்தபடியே செல்வதை காணமுடிந்தது.

    குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டியும் குளிர் காய்ந்து வருகிறார்கள். நீலகிரியில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கலாம் என வந்த சுற்றுலா பயணிகளும் சுற்றுலா தலங்களை பார்வையிட முடியாமல் விடுதிகள், லாட்ஜூகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே வெயில் குறைந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் குறைந்து, மேகமூட்டமாகவே காணப்பட்டது. இன்று காலை 9 மணியை தாண்டியும் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    அத்துடன் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. வீடுகளில் உள்ள தரைகள் அனைத்தும் ஏ.சியில் இருப்பதை போன்று குளு, குளு என்று காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே சுவர்ட்டர், தலையில் குல்லா மற்றும் குளிர் தாங்க கூடிய ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகின்றனர்.

    கடும் குளிர் நிலவுவதால் மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    மேகமூட்டம் நிலவுவதால், அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்களில் செல்வோர் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.

    • காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.
    • ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி ஹெத்தையம்மன் திருவிழா கடந்த 27-ந் தேதி கோத்தகிரி அருகே உள்ள பேரகணியில் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகர் இனமக்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து மாவட்டத்தில் படுகர் இன மக்கள் வசிக்க கூடிய பகுதிகளில் 6 கிராமம், 8 கிராமம், 10 கிராமம் என கிராமங்களாக சேர்ந்து ஹெத்தையம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி குன்னூர் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் 8 கிராம மக்கள் இணைந்து திருவிழாவை விமரிசையாக கொண்டாடினர்.

    இதில் மல்லிக்கொறை, காரக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்ளிட்ட 8 கிராம படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருவிழாவையொட்டி காரக்கொரையில் இருந்து ஹெத்தையம்மன் குடை ஊர்வலம் தொடங்கியது.

    ஊர்வலத்தில் படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய வெண்ணிற ஆடை அணிந்து, பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து கொண்டு, நடனமாடிய படி ஹெத்தையம்மன் குடையுடன் செங்கொல் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் ஹெத்தைக்காரர் ஹெத்தை தடியுடன் பூசாரி தலையில் அம்மனை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    காரக்கொரையில் தொடங்கிய ஊர்வலமா னது, ஜெகதளா வந்து, மல்லிக்கொரை, ஓதனட்டி, ஒசட்டி உள்பட 8 கிராமத்திற்கும் சென்று, மீண்டும் ஜெகதளாவில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலை அடைந்தது.

    இதனை தொடர்ந்து, படுகர் இன மக்கள் ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். பின்னர் கோவிலில் அனைவரும் ஒன்று கூடி பாரம்பரிய இசைக்கு ஏற்ப நடனமும் ஆடினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    இந்த திருவிழாவில் 8 கிராம படுகர் இன மக்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இருந்தும் படுகர் இன மக்கள் வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். இதுதவிர வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வந்து ஹெத்தையம்மனை வழிபட்டனர்.

    • கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது.
    • வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் பனிப்பொழிவும், மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குன்னூர் பகுதியில் சீதோசன நிலை மாறி மாறி வருகிறது. இதில் இன்று அதிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையிலும் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.

    கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் குடியிருப்புகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளனர்.

    மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீலகிரிக்கு வந்தவர்கள் நேற்று மாலை முதல் சமவெளி பகுதிகளுக்கு திரும்பி கொண்டு வருகின்றனர். இன்று காலையும் ஏராளமானோர் ஊர்களுக்கு சென்றனர்.

    இதனால் மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்தன. கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

    முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடியே வாகனங்களை இயக்கி செல்கிறார்கள். வாகனங்கள் அனைத்தும் சாலையில் மிகவும் ஊர்ந்தபடியே செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உறைபனி அதிகமாக உள்ளது. இன்றும் உறைபனி அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களில் உறைபனி கொட்டி புல்தரை முழுவதும் மறைந்து, வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காணப்பட்டது.

    இதுதவிர கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களிலும் உறைபனி கொட்டி இருந்தது. அதனை பொது மக்கள் அகற்றி விட்டு தங்கள் பணிக்கு சென்றனர்.

    இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலையாக 23.07 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து காத்து கொள்ள குல்லா, சுவர்ட்டர் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றனர்.

    ஆங்காங்கே தீ மூட்டியும் மக்கள் குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டியில் கொட்டி வரும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. காலையில் பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    அவர்கள் சுவர்ட்டர் அணிந்து கொண்டும், தலையில் குல்லா அணிந்து சென்றதையும் காணமுடிந்தது.

    தொடர்ந்து கொட்டி வரும் உறைபனியால் மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

    • தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
    • சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    ஊட்டி:

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.

    2024 புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தனியார் அமைப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.

    இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், அறுசுவை உணவு என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலாபயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது.

    இன்று காலையும் ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் கம்பளி ஆடை மற்றும் குல்லா அணிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

    சுற்றுலாபயணிகள் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    அப்போது பெரும்பாலானோர் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வந்து அதனை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    எனவே ஊட்டி தாரவவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்கு மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

    இதுதவிர ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு அவை தற்போது கண்ணாடி மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு சுற்றுலா பயணிகளை கவரும்வகையில், ஜப்பான் பூங்காவில் அழகிய மாடம் மற்றும் மீன் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வண்ணமிகு இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த இருக்கைகள் காய்கறி-பழங்களின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது.

    மேலும் தாவரவியல் பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பழைய டயர்கள் மூலம் தேநீர் கோப்பை உட்பட பல்வேறு வடிவங்களில் மலர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அதில் விதம்-விதமாக மலர்ச்செடிகள் வைக்கப்பட்டு உள்ளன. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

    • காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை ஒன்று நடமாடி வருகிறது.

    இந்த சிறுத்தை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    ஏலமண்ணா பகுதியில் கடந்த 21-ந் தேதி காலை புகுந்த சிறுத்தை அந்த பகுதியை சேர்ந்த சரிதா(வயது29), துர்கா(55), வள்ளியம்மாள் ஆகிய 3 பெண்களை சிறுத்தை தாக்கியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதனை அறிந்த மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை பிடிக்க 5 இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அத்துடன் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி, சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.

    காயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களில் சரிதா என்ற இளம்பெண் மட்டும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சரிதா பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

    இந்த தகவல் அவர்களது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில குவிந்தனர். அவர்கள் சரிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×