search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஏற்கனவே 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது
    • 25, 26-ந்தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    ஊட்டி,

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 1.1.2024-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம்-2024, 27.10.2023 முதல் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.

    இதன்படி 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 27.10.2023 முதல் 9.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும், இது தொடர்பாக ஏற்கனவே 4.11.2023, 5.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது, 18.11.2023-ஐ தமிழ்நாடு அரசு வேலை நாளாக அறிவித்ததைத் தொடர்ந்து, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த சிறப்பு முகாம்கள் 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய நாட்களில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

    எனவே, அனைத்து பொதுமக்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைத்திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றிற்கு ஆட்சேபனைகள் தெரிவிக்க கடைசி நாள் 9.12.2023 ஆகும். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு, எதிர்வரும் 5.01.2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 மாதங்களாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், பல ஆயிரம் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கூட தினமும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுகிறது.

    பொதுவாகவே லேசான மழை தூறல் ஏற்பட்டாலே நீலகிரியில் மின்தடை ஆவது சர்வ சாதாரணமான விஷயம் என மக்கள் பழகி விட்டனர். ஆனால் கடந்த இரண்டொரு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    • தோட்டத்தில் வேலை பார்த்தவரை தும்பிக்கையால் தாக்கியது
    • ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் தீவிர சிகிச்சை

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடகெங்கரை மந்தட்டியைச் சேர்ந்த செவனன் மனைவி வெள்ளையம்மாள் (வயது 63). இவர் நேற்று காலை தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்தார்.

    அப்போது புதர் மறைவில் இருந்து திடீரனெ வெளியே வந்த ஒரு காட்டுயானை துதிக்கையால் தாக்கிவிட்டு சென்றது. இதில் வெள்ளையம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனை கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது.
    • டாக்டர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு, உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அவை தண்ணீர் மற்றும் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலா வருகின்றன. பின்னர் அங்கு உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இருந்த போதிலும் வனவிலங்குகள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு கூடலூர் அடுத்த புளியம்பாறை பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. பின்னர் அங்குள்ள விளைநிலங்களை நோக்கி சென்றது. அப்போது காட்டு யானை திடீரென தும்பிக்கையை உயர்த்தி பிளிறியது.

    மேலும் அங்குள்ள மரம் ஒன்றையும் இழுத்து சாய்க்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக மரம் சாய்ந்து அங்குள்ள மின்கம்பியின் மீது விழுந்தது.

    இதில் யானையின் துதிக்கை மின் கம்பியில் படவே யானை மீது மின்சாரம் தாக்கியது. இதில் யானை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டது.

    இன்று அதிகாலையில் வயல்வெளிக்கு வந்த அப்பகுதி மக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மாவட்ட வனஅதிகாரி கவுதமன் தலைமையிலான வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை. யானை இன்று அதிகாலை இரைதேடி ஊருக்குள் புகுந்ததும், அப்போது மரம் ஒன்றை சாய்த்தபோது, மின்சாரம் தாக்கி பலியானது தெரிய வந்தது.

    தொடர்ந்து அங்கு கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து கிடக்கும் காட்டு யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த புளியம்பாறையில் மின்சாரம் தாக்கியதில் ஆண் காட்டு யானை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.
    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முக பிரியன் (வயது 28).

    இவர் நேற்று பகல் முழுவதும் சேலாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மாலையில் பணியை முடித்து விட்டு, அங்கிருந்து குன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. இதனை பார்த்த சண்முகபிரியன், தனது மோட்டார் சைக்கிளை திருப்பி, வேகமாக சென்ற காரினை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    காரில் இருந்தவரிடம் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை வேகமாக இயக்கி செல்கிறீர்கள் என கேட்டார்.

    ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சண்முகபிரியன் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலாஸ் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(38) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூ மற்றும் பழக்கடை நடத்தி வந்துள்ளார்.

    மேலும் இவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்துல் காதர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு
    • மின்வாரிய ஊழியர்களும் கவுரவிப்பு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் உலிகல்அரசு உயர்நிலைப் பள்ளியில் நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உலிக்கல் சண்முகம் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    அப்போது அங்கு குழந்தைகள் தின நிகழ்ச்சி, பள்ளிக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்குதல் மற்றும் சிறப்பாக சேவை செய்த மின்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். அமிர்தாஜ் பவுண்டேஷன் நிறுவனர் அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் ஆதிவாசி கிரா மப்பகுதிகளில் சிறப் பாக சேவை செய்த மின்துறை ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து உலிகல் பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வளம் மீட்பு பூங்கா ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உலிக்கல்பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், நீலகிரி விடியல் அறக் கட்டளை தலைவர் லாரன்ஸ்,சோசியல் மீடியா தலைவர் சிக்கந்தர், மனிதனை நேசிப்போம் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சாதிக் சேனா நன்றி கூறினார்.

    • படுகாயங்களுடன் கிடந்தவரை தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்
    • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளை யம் மலைபாதையில் பல்வேறு இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன. அவற்றில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    குன்னூர் அடுத்த சேலாஸ் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது46). கூலித்தொழிலாளி. அவர் குரும்பாடி அருகே உள்ள அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் கால் தவறி 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். தகவலின்பே ரில் போலீசார் மற்றும் தீயனைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 100 அடி ஆழம் உடைய பள்ளத்தாக்கில் கயிறு கட்டி கீழே இறங்கி சென்று, 4 மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ரவிச்சந்திரன் பள்ளத்தாக்கின் மத்தியில் தலை மற்றும் கால்களில் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு மேலே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் அங்குள்ள அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
    • கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது

    ஊட்டி,

    ஊட்டியில் கூட்டுறவு சங்கத்தின் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு சங்க வார விழா நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாள் நிகழ்ச்சி ஊட்டி அடுத்த கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

    அப்போது நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா் பதிவாளா் மற்றும் செயலாட்சியா் சி.அய்யனாா் முன்னிலையில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் கால்நடை டாக்டர்கள் சிவசங்கா், டேவிட் மோகன், விஜயபிரபாகரன் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு மருத்துவம் பார்த்தனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பூச்சி மருந்து வழங்குதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை கருவூட்டல், மலட்டுத்தன்மை நீக்குதல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கு தாது உப்புக்கலவை தொகுப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு (பால்வளம்) சாா் பதிவாளா் ஒ.கே.பிரேமன், முதுநிலை ஆய்வாளா்கள் சுந்தரநடராஜன், சிவராஜ், கோக்கால் ஆதிவாசி பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க செயலாளா் மகாலிங்கம் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

    • தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த அறிவுறுத்தல்
    • வருகிற 22-ந் தேதி வரை 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், பன்றிகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பருவமழைக்கு முன்பாகவும் அதன்பிறகும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு க்கான பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு வனவிலங்குகளை கணக்கெடுப்பதற்காக பிரத்யேக கருவிகளும் வழங்கப்பட்டன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று காலை தொடங்கியது.

    அவர்கள் முதுமலை காப்பக பகுதிகளுக்கு சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களுக்கு உயர்அதி காரிகள் வனவிலங்குகள் கணக்கெடுப்பு குறித்து முக்கிய அறிவுரைகளை வழங்கினர்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் 321 சதுர கி.மீ., பரப்பளவில் உள்மண்ட லம் அமைந்து உள்ளது. இங்கு தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்கள் இடம்பெற்று உள்ளன.

    மேற்கண்ட பகுதிகளில் தற்போது பருவமழைக்கு பிந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்போது அவர்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்படி கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 22-ந் தேதி வரை நடக்க உள்ளது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் பங்கேற்பு
    • கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த மாக்கமூலா பகுதியில் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு திட்டம் தொடக்க விழா நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்து கொண்டு பெயர்ப்ப லகையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் அவர் பேசும்போது, மாவட்டத்தில் முதல்முறையாக கிராம விழிப்புணா்வு திட்டம் கூடலூரில் தொடங்கப்பட்டு உள்ளது. இது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். கிராம விழிப்புணர்வு திட்டத்தின்கீழ், கிராமத்துக்கு ஒரு காவலா் வீதம் நியமிக்கப்படுவா்.

    அந்த காவலரை பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடா்புகொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். இதன்மூலம் கிராமத்தில் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றார்.

    தொடா்ந்து கூடலூா், மசினகுடி, ஸ்ரீமதுரை, ஓவேலி, தேவா்சோலை, நடுவட்டம் ஆகிய பகுதிகளுக்கு கிராம விழிப்புணா்வு திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டு உள்ள காவலரின் பெயா், கைப்பேசி எண் அடங்கிய அறிவிப்புப் பலகையை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களிடம் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், கூடலூா் டி.எஸ்.பி. செல்வராஜ், பந்தலூா் டி.எஸ்.பி. செந்தில்குமாா் உள்பட பலர் கலந்துகொண்டனா்.

    • குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சிறுத்தை, காட்டெருமை, காட்டு யானை, காட்டுப்பன்றி மற்றும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் நடமாடி வருகிறது.

    குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் கரடிகள், வீடுகளுக்குள் புகுந்து, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருகிறது. கரடிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சதில் உள்ளனர்.

    மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே பயந்து, வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    குன்னூர் பகுதியில் உள்ள கன்னி மாரியம்மன் கோவில் தெரு என்ற இடத்தில் கரடி ஒன்று கடந்த சில தினங்களாகவே சுற்றி திரிந்தது.

    கரடி வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றதால் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் உள்ள சி.சி.டிவி காட்சிகளை பார்த்தனர்.

    அப்போது, கரடி குட்டி போட்டு இருப்பதாலும், குட்டி அங்கேயே விட்டு சென்றதாலும் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது தெரியவந்தது.

    தொடர்ந்து கரடி அங்கேயே முகாமிட்டு இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுகொண்டனர்.

    ×