search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரக்காணம் அருகே  பிரபல கள்ளச்சாராய வியாபாரி கைது: 550 லிட்டர் சாராயம் பறிமுதல்
    X

    மரக்காணம் அருகே பிரபல கள்ளச்சாராய வியாபாரி கைது: 550 லிட்டர் சாராயம் பறிமுதல்

    • புதுவை பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக இருக்கும்.
    • 15 கேன்கள் மற்றும் 100 மில்லிஅளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி புதுவை மாநிலம் அருகில் உள்ளது. இதனால் புதுவை பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் மற்றும் பீர் உள்ளிட்ட மதுபானங்களில் விற்பனை எப்போதுமே அமோகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன் மரக்கணம் அருகே எக்கியர் குப்பம் கடற்கரை ஓரமுள்ள வம்பா மணல் பகுதியில் விற்ற விஷ சாராயத்தை குடித்துவிட்டு எக்கியர் குப்பம், மரக்காணம் பகுதிகளில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.எஸ்.பி.,இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரையும் மேல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கி இருப்பதாக பொதுமக்கள் குறை கூறுகின்றனர். மரக்காணம் அருகே கரிப்பாளையம் பகுதியில் உள்ள பிரபல கள்ளச்சாராய வியாபாரி வீட்டில் சாராயக்கேன்கள் மறைத்து வைத்திருப்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள்மற்றும் போலீசார் கரிப்பாளையம் கிராமத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு தோட்டத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்கள் மற்றும் 100 மில்லிஅளவு கொண்ட 270 சாராய பாக்கெட்டுகள் இருந்துள்ளது. போலீசார் இதனை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பிரபல கள்ளச்சாராய வியாபாரி லோகு மகன் ஞானவேல் வயது (24) என்பவரை கைது செய்து அவரிடம் இந்த சாராயம் எங்கிருந்து வந்தது. இதனை மொத்தமாக விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரிகள் யார் யார். அவர்கள் எங்கு உள்ளனர். மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் யார் யார் மொத்தமாக கள்ளச்சா ராயத்தை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம் விற்பனை தொடங்கி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×