search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது
    X

    தமிழகம் முழுவதும் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது

    • தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
    • சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு பெய்துவரும் கோடை மழையால் வெப்பம் தணிந்து உள்ளது எனினும் ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லை.

    எனவே வருகிற ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் தற்போது 2,999 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதேநாளில் 3 ஆயிரம் மி.கனஅடியை தாண்டி இருந்தது. இதேபோல் முக்கிய குடிநீர் ஏரியான புழலில் தற்போது 2,544 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன.அடி கடந்த ஆண்டு இதே நாளில் ஏரியில் 2,956 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, அணைகளில் கடந்த ஆண்டை விட தற்போது தண்ணீர் இருப்பு குறைந்த அளவிலேயே உள்ளது.

    மேட்டூர் அணையில் தற்போது 69 ஆயிரத்து 145 மி.கன.அடி தண்ணீர் உள்ளது. (மொத்த கொள்ளளவு 93,470 மி.கன. அடி). ஆனால் கடந்த ஆண்டு 71,513 மி.கன. அடி தண்ணீர் இருந்தது.

    வைகை அணையில் கடந்த ஆண்டை விட தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து விட்டது. அணையில் தற்போது 2,535 மி.கன.அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (மொத்த கொள்ளளவு 6.091 மி.கன.அடி). கடந்த ஆண்டு 5,643 மி.கன.அடி தண்ணீர் இருந்தது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 5,500 மி.கன.அடி. இதில் 269 மி.கன. அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 1,737 மி.கன. அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பவானி சாகர், அமராவதி, பெரியார் அணை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி அணைகளிலும் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டை விட குறைந்தே காணப்படுகிறது.

    வரும் நாட்களில் வெப்பத்தின் காரணமாக தண்ணீர் இருப்பு மேலும் குறையும் என்பதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் சப்ளை செய்வதற்காக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது:-

    தமிழகத்தில் உள்ள 90 குடிநீர் ஏரி, அணைகளில் மொத்தம் 224.297 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    தற்போது 135.087 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. கோடைகாலம் முடியும் வரை தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். பருவமழையின் போது டிசம்பர், ஜனவரி மாதங்களில் பெரும்பாலான ஏரி, அணைகள் முழு கொள்ளளவை எட்டி இருந்தன.

    சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் கிடைக்கும் என்பதால் எந்த பாதிப்பும் இருக்காது. அனைத்து மாவட்டங்களிலும் கோடை காலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×