search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலாப் பயணிகளால் திக்கு முக்காடிய ஒகேனக்கல்
    X

    சுற்றுலாப் பயணிகளால் திக்கு முக்காடிய ஒகேனக்கல்

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர்.
    • போட் கிளப், மணல் திட்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    தருமபுரி,

    தமிழகத்தின் நயாகரா என்று போற்றப்படும் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் தமிழகத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து நேற்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்தனர்.

    இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் திக்கு முக்காடியது.

    ஒகேனக்கல் பஸ் நிலையத்தில் இருந்து மெயின் பால்ஸ் வரையிலும் மற்றும் மீன் மார்க்கெட் பார், உணவருந்தும் பார், மெயின் அருவி, சினி பால்ஸ், போட் கிளப், மணல் திட்டு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

    அருவிகளில் குளிப்பதற்கு இடமின்றி ஆற்று படுகைகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் துறையில் ஒரு நபருக்கு ரூ.750 என்ற அரசு கட்டணத்தில் ஒரு பரிசலுக்கு நான்கு பேர் என சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக பரிசல் சவாரி செய்தனர்.

    அங்குள்ள மீன் மார்க்கெட்டில் டன் கணக்கில் மீன் விற்பனை செய்யப்பட்டு குடும்பத்துடன் சமைத்தும், அங்குள்ள சமையலர்களிடம் கொடுத்தும் சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் ஒகேனக்கல் பஸ் நிலையம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா தல வாகன பாதுகாப்பு மையம், ஒகேனக்கல் மெயின் சாலை அனைத்து பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டு போதிய இடம் இன்றி ஒகேனக்கல் காவல் நிலையத்தில் இருந்து வழிநெடுகிலும், இருபுறங்களிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.தொடர் விடுமுறையால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×