search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு நிமிட பட்டா திட்டம்: பத்திரப்பதிவின்போதே இனி உடனடி பட்டா-தமிழக அரசு நடவடிக்கை
    X

    ஒரு நிமிட பட்டா திட்டம்: பத்திரப்பதிவின்போதே இனி உடனடி பட்டா-தமிழக அரசு நடவடிக்கை

    • பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
    • விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை (தானியங்கி பட்டா) நடைமுறைப்படுத்தி உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    ஆனால் கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்து உள்ளது.

    அதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது.


    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்யும் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது.

    உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையதளத்தை மேம்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் உள்ள 317 தாலுகாக்களில் 17 தாலுகாக்கள் முற்றிலும் நகர்புறத்தில் உள்ளது. இது தவிர மீதமுள்ள 300 தாலுகாவில் முதல்கட்டமாக 220 தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடலாம்.

    இந்த இணையதளம், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது 220 தாலுகாவில் உள்ள நத்தம் குடியிருப்புகளை பத்திரப்பதிவு செய்யும் போதே இனி பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

    கடந்த சனிக்கிழமை சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இன்று (நேற்று) முதல் பட்டா பெயர் மாற்றம் செய்யும் பணிகள் தடங்கலின்றி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுமக்கள் கவனத்திற்கு...

    தமிழக அரசின் இந்த திட்டத்தை பொதுமக்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே பத்திரப்பதிவு செய்யும் போதே, அதன் உரிமையாளர் பெயரில் பட்டா இருக்கிறதா என்பதனை மக்கள் முதலில் சரிபார்க்க வேண்டும்.

    அப்படி அவர்களது பெயரில் பட்டா இல்லாவிட்டால், முதலில் அவர்களை பட்டா மாற்றி வாருங்கள் என்று கூறவேண்டும்.

    அதன்மூலம் அவர்களது பெயரில் பட்டா வந்து விட்டால், நாம் கிரையம் செய்யும்போது நமது பெயருக்கு பட்டா எளிதாக மாறி விடும். ஒருவேளை அதனை நாம் கவனிக்காவிட்டால், அதன் பிறகு பட்டா மாற்றும் பணியினை நாம் தான் மேற்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×