search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே இணையதளம் 5 சேவைகள்: தமிழக அரசு அதிரடி
    X

    ஒரே இணையதளம் 5 சேவைகள்: தமிழக அரசு அதிரடி

    • அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது.
    • லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.

    சென்னை:

    தமிழக அரசு வழங்கும் அனைத்து சேவைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாக வராமல், இணையதளம் மூலமே பொதுமக்கள் அனைத்து சேவைகளையும் எளிதாக பெற முடிகிறது. அதனால் லஞ்சம் குறைந்து வெளிப்படையான நிர்வாகத்திற்கு அடித்தளமிடுகிறது.

    ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் அரசு வழங்கும் சில சேவைகளை பணம் கொடுத்து பெறுகின்றனர்.

    உதாரணத்திற்கு பொதுமக்கள் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். ஆனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், 3-ம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள்-அதிகாரிகள் இடையே மூன்றாம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளார். அந்த அடிப்படையில்தான் தற்போது திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகிறது.

    சுய சான்றிதழ் முறையில் கட்டிட அனுமதி வழங்கும் திட்டமும் அதன் ஒரு பகுதிதான். இந்தநிலையில் அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.

    அதில் முதல் கட்டமாக தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக நிலம் தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்க ஒருங்கிணைந்த நில சேவை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள் அனைத்தும் தனித்தனி இணையதளங்களில் சென்று பார்க்க வேண்டியுள்ளது. உதாரணமாக பத்திரப்பதிவு விவரங்களை பத்திரப்பதிவு துறையின் இணைய பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.

    அதேபோல் பட்டா சேவைகள் பெற தனி இணையதளம், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய தனி இணையதளம், அந்த நிலத்திற்கான சொத்து வரி, குடிநீர் வரி அறிந்து கொள்ள தனி இணையதளம், மின் இணைப்பு விவரம் அறிய தனி இணையதளம் என ஒவ்வொரு இணையதள பக்கமாக சென்று பார்க்க வேண்டும்.

    எனவே தமிழக அரசு, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை வடிவமைத்து உள்ளது.

    இந்த இணையதளத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற நிலங்களின் பட்டா-சிட்டா மற்றும் வரைபட விவரங்கள், பத்திரப்பதிவு விவரங்கள், நிலம் தொடர்பான கோர்ட்டு மற்றும் வருவாய்த்துறை வழக்கு விவரங்கள், மின் இணைப்பு மற்றும் கட்டண விவரங்கள், சொத்து-குடிநீர் வரி விவரங்கள் என அனைத்தையும் ஒருங்கிணைந்து மிக எளிதாக பார்க்கலாம்.

    முற்றிலும் தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் பொதுமக்களும் பலன் அடையலாம்.

    இந்த இணையதளம் இன்னும் முழுஅளவில் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதில் உள்ள பத்திரப்பதிவு உள்பட சில சேவைகள் செயல்படவில்லை.

    இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் பொதுமக்கள் அதில் முழு அளவிலான சேவைகளை பெற முடியும் என்றும், அதில் சேவைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

    Next Story
    ×