search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    23 நாட்களுக்கு பிறகு தொடங்கிய ஊட்டி மலைரெயில் சேவை
    X

    23 நாட்களுக்கு பிறகு தொடங்கிய ஊட்டி மலைரெயில் சேவை

    • இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரெயில் இயக்கப்படும்.
    • இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு மற்றும் பாறாங்கற்கள் உருண்டு விழுந்து, ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.

    ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ரெயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை மற்றும் மலைரெயில் பாதையில் பாலம் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்ததால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை ஊட்டி மலை ரெயில் சேவையை சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்ததாலும், ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிந்ததாலும், 23 நாட்களுக்கு பின்னர் இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்படும் என்று சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

    இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் இன்று காலை 7.10 மணிக்கு மலைரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    23 நாட்களுக்கு பிறகு இன்று ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைரெயில் சேவை தொடங்கியது.

    Next Story
    ×