search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை  அழைத்து செல்லும் பரிசல் ஓட்டிகள்
    X

    தடைசெய்யப்பட்ட இடங்களில் உணவு அருந்தும் சுற்றுலா பயணிகளையும், பரிசல் ஓட்டியையும், பரிசல் பயணத்தின் போது கொடுக்கப்பட்ட லைப் ஜாக்கட்டையும் படத்தில் காணலாம்.

    ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆபத்தான இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் பரிசல் ஓட்டிகள்

    • மதுவுடன் அசைவ விருந்தினை பரிமாறி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி பரிசல் ஓட்டிகள் கூடுதல் பணம் கேட்கின்றனர்.
    • அருவியின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்காக ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று குழுவாக புகைப்படம் எடுக்கும் போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

    ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகளின் பெரும்பாலானோர் காவிரி ஆற்றின் அழகை காண்பதற்காக பரிசில் பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

    சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர் பிரதான அருவி, தொங்கு பாலம் ஆகியவற்றை பார்வையிட்ட பிறகு பரிசல் பயணம் மேற்கொள்வதும், பெரும்பாலானோர் மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து நேரிடையாக காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு மணல்மேடு பகுதி வரை அழைத்துச் செல்கின்றனர்.

    பரிசல் துறைக்கு வரும் பயணிகளிடம் ஒரு சில பரிசல் ஓட்டிகள் தாங்களாகவே அசைவ உணவிற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும், சமைத்த பின்பு உணவு பரிசலில் எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் குளித்த பிறகு உணவை உட்கொள்ளலாம் என கூறி அழைத்து செல்கின்றனர்.

    பின்னர் பரிசல் பயணம் மேற்கொண்டு பிறகு சினி அருவியை கடந்து காவல்துறையினரால் தடை செய்யப்பட்ட பெரியபாணி, பிரதான அருவி அருகில் உள்ளிட்ட ஆபத்தான இடங்களில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்று மதுவுடன், அசைவ உணவுகளை பரிமாறுவதாகவும், ஐந்தருவி பகுதியில் ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று புகைப்படம் எடுப்பதால் உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வரும்போது காவல் நிலையம் அருகே பரிசல் ஓட்டிகள் வாகனத்தினை நிறுத்தி பரிசல் பயணம் அழைத்துச் செல்வதாகவும், அதனுடன் மீன் குழம்புடன் உணவு, மசாஜ் செய்வது ஆகியவற்றை தாங்களே ஏற்பாடு செய்வதாக கூறுகின்றனர்.

    புதிதாக ஒகேனக்கல் பகுதிக்கு வருவார்கள், தனிநபரே அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்வதால் விரைவாக பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு அலைச்சல் இன்றி எளிதில் வீடு திரும்பலாம் என ஒருவரிடமே அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு தெரிவிக்கின்றனர்.

    மாமரத்து கடவு பரிசல் துறையில் இருந்து பரிசல் பயணம் மேற்கொள்ளும் போது ஐந்தருவி பகுதிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுப்பதற்காக அருவியின் மிக அருகில் அழைத்துச் செல்கின்றனர்.

    பின்னர் மீண்டும் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் போது உணவு தயாராகி உள்ளதாகவும், சினி அருவியில் குளித்துவிட்டு அங்கேயே அமர்ந்து உணவு அருந்த ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கின்றனர்.

    இதில் மது பிரியர்கள் இருப்பின் அவர்களிடம் மது வகைகளை தாங்களே ஏற்பாடு செய்வதாக கூறி ஒகேனக்கல் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்படும் மதுவினை பெற்று அருவிக்கு அருகிலும், தடை செய்யப்பட்ட இடங்களில் அமர வைத்து, மதுவுடன் அசைவ விருந்தினை பரிமாறி சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி கூடுதல் பணம் கேட்கின்றனர்.

    இதில் ஒரு சிலர் பரிசல் பயணத்தின் போது பரிசலில் மது அருந்த அனுமதிப்பதால் போதையில் சுற்றுலாப் பயணிகள் பரிசல்களை இயக்குகின்றனர். அதனை சுற்றுலாப் பயணிகள் தராவிடில் அங்கேயே வாக்கு வாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது மது போதையில் உள்ள சுற்றுலாப் பயணிகள் நிலை தடுமாறி அருவியில் விழுந்தும், ஐந்தருவி பகுதியினை பார்வையிட அழைத்துச் செல்லும் போது அருவியின் அருகில் நின்று புகைப்படம் எடுப்பதற்காக ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் சென்று குழுவாக புகைப்படம் எடுக்கும் போது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே ஐந்தருவி பகுதியில் ஆபத்தான இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுற்றுலா பயணிகளை ஆசை வார்த்தை கூறி ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஒட்டிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×