search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா
    X

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது
    • மாணவர்களுக்கு வேந்தர் சீனிவாசன் அறிவுரை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்து, பணி நியமன ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினார். அப்போது பேசியதாவது:-இந்த முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் இன்று பணி நியமன ஆணைகளை பெறும் அனைவருக்கும் தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்து எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.இன்று உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்திற்கான முக்கியமான நாள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கத்தை கடைபிடித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு இந்த கல்லூரிக்கும், உங்கள் ஆசியர்களுக்கும், மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    கடவுளை தேடி எந்த கோவிலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் கண் முன்னே வாழும் கடவுள் நமது பெற்றோர்கள். எனவே அவர்களின் கடின உழைப்பையும், தியாகத்தையும் நாம் உயிர் உள்ளவரை மறக்கக்கூடாது. அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது நமது கடமையாகும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். இந்த உலகமே அன்பினால் பிணையப்பட்டது. எனவே அன்பை மட்டும் விதைப்போம், அதையே அறுவடை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் டி.சி.எஸ், நிசான் டெக்னாலஜி, லூமினஸ், அல்ட்ராடெக், பெகட்ரான், இ-கான், லோட்டி, எபி சோர்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் ஜோஹோ கார்ப்பரேஷனின் தொழில் நுட்ப இயக்குனர், ராஜேந்திரன் தண்டபாணி, விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் மண்டல தலைவர், ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் அவர்கள் பேசுகையில், பணி நியமன ஆணைகளை பெரும் மாணவர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.மேலும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதி நவீன ஆய்வக வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கண்டு பெருமை படுவதாகவும், அவைகள்தான் இதுபோன்ற தரமான மாணவர்களை உருவாக்கியிருக்கிறது என்றும் கூறினர்.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில் நிறுவங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.முன்னதாக துணை முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்றார். புல முதல்வர் (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு) முனைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், புல முதல்வர் (அகாடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் சிவராமன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×