search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியூர் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க கோரி போராட்டம்
    X

    கிளியூர் கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்க கோரி போராட்டம்

    • சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அரசு அலுவலர்கள் பேச்சு வார்த்தை
    • சுத்தமான குடிநீர் வழங்குவதாக உறுதி

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசித்து வருகின்றனர். நன்னை ஊராட்சியில் இருந்து கிளியூர் பகுதிக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் கிளியூர் பகுதிக்கு வழங்கப்படும் குடிநீர், பொதுமக்கள் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும், அதிக அளவில் சுண்ணாம்பு சத்து கலந்து இருப்பதால் இதனைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்களும், சிறுநீரக கோளாறும் ஏற்படுகிறது.சுத்தமான குடிநீர் வழங்கக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும் செயல்படுத்தாததால் ஆத்திரம் அடைந்த கிளியூர் பொதுமக்கள், தங்களுக்கு தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் குடிநீர் வழங்க கோரி திடீரென நன்னை துணை மின் நிலையம் அருகில் பெருமத்தூர் சாலையில், காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குன்னம் போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து தூய குடிநீர் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதனை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் பெருமத்தூர் நன்னை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×