search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள்
    X

    அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள்

    • அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
    • புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க பணிக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசும்போது கூறியதாவது:- பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியினை வனத்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மரம் வளர்ப்பதின் முக்கியத்துவத்தை பொது மக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பல்வேறு திட்டங்களின் மூலம் நாம் நடும் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து அவற்றை மரங்களாக வளர்த்துக் காட்ட வேண்டும். புவி வெப்பமயமாதலை தவிர்க்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையிலும், தொடர்ந்து மழை பொழிந்திடவும் மரக்கன்றுகளை வளர்ப்பது இன்றைய காலத்தில் இன்றியமையாததாகும். எனவே வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றம் உழவர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலைகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அதிகளவிலான மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

    அரசுப்பள்ளிகள், கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம். நமது பெரம்பலுார் மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் உள்ள மாவட்டமாக, பசுமை போர்வையால் போர்த்தப்பட்ட மாவட்டமாக உருவாக அரசு அலுவலர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவு மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருளாளன், பயிற்சி உதவி கலெக்டர் பிரியதர்ஷினி மற்றும் வனச்சரகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×