search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • துறைமங்கலம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய சிறுவன்
    • வழக்கு பதிந்து போலீசார் சிறுவனை தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இதனால் அந்த கோவில் நேற்று மதியமும் திறந்திருந்தது. அப்போது மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கோவிலில் ஆட்கள் யாரும் இல்லாத போது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கோவிலுக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்து காாட்சிகளை பார்வையிட்டனர். அதில் கோவிலுக்குள் 15 வயதுடைய ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து உண்டிலைய உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றிருந்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து விசாரணை நடத்தி அந்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூர் உணவகங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்
    • இறைச்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, இளங்கோவன் ஆகியோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் உணவகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தரமற்றமுறையில் வைக்கப்பட்டிருந்த 2 கிலோ சமைக்கப்பட்ட உணவு, அரை கிலோ சிக்கன் ஆகியவற்றை உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ச்சியாக பெரம்பலுரில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) அனைத்து பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    • பெரம்பலூரில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
    • குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இலவச தொலைபேசி எண் 1800 599 5950 எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியும், பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பஸ்ஸ்டாப், ரேசன்கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் மற்றும் முக்கிய அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையில்படும் படி இலவச எண் கொண்ட போஸ்டர், பேனர் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

    • அகரம்சீகூர் பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தல்
    • டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே மங்களமேடு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி 4 -யூனிட் கிராவல் மண் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை மங்களமேடு காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.மேலும் டிப்பர் லாரி ஓட்டுனரான பிரம்மதேசம் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன்(49)என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக டிப்பர்லாரிகளை வழிமறித்து போலிஸார் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் நகராட்சி சார்பில் குப்பை இல்லா நகரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மை பாரத இயக்கம் 2.0 - வை முன்னிட்டு குப்பை இல்லாத நகரமாக்க வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆணையர் ராமர், துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடத்தல் மற்றும் மனித கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல் பற்றிய புகார்களை தெரிவிக்க வேண்டிய 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலம் பாலக்கரை , சங்குபேட்டை, கடைவீதி வழியாக பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.இதில் நகராட்சி கவுன்சிலர்கள் துரை காமராஜ், தங்க சண்முக சுந்தரம், சித்ரா, சவுமியா, ரஹ்மத்துல்லா, நல்லுசாமி மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு, வக்கீல் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் நடந்த பாவை விழாவில் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டார்
    • வெற்றிப்பெற்ற மாணவிக்கு நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மையத்தின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஸ்ரீ சாரதா மகளிர் கலைக் கல்லூரியில் நடந்தது.விழாவிற்கு ராமகிருஷ்ணா ஆன்மீக பண்பாட்டு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். கலெக்டர் கற்பகம், எஸ்பி ஷ்யாம்ளாதேவி, உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அருட்செல்வி என்கிற பட்டத்துடன் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும், சிறப்புப் பரிசு ரூ. ஒரு ஆயிரமும் என ரொக்க பரிசுத் தொகையை நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் வழங்கி பாராட்டினார். உமா பஸ் உரிமையாளர் ராமலிங்கம் அருள்செல்வன் என்ற பட்டம் வழங்கப்பட்டது.விழாவில் கல்லூரி முதல்வர்கள் சுபலெட்சுமி, மாரிமுத்து, பிரபாகரன், பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, கோமதி, சத்தியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ருமாந்துறை ஈஸ்வரி நகரில் கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள திருமாந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ ஈஸ்வரி நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை, அஷ்டபந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் நான்கு கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக விழாவில் ஆடுதுறை, திருமாந்துறை நோவா நகர்மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மங்களமேடு போலீசார் செய்திருந்தனர்.

    • குன்னம் புதுவேட்டைக்குடியில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானார்
    • இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி மெயின் ரோட்டை சோ்ந்தவர் சின்னதுரை (வயது 29), எலக்ட்ரீசியன். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு குழந்தை இல்லை. சின்னதுரை வரிசைபட்டி கிராமத்தில் ஒருவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலைக்கு சென்றிருந்தார்.அந்த வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறிய சின்னதுரை மின் பராமரிப்பு பணி செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக உயா் அழுத்த மின்சார பாதையில் அவரது உடல் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் சின்னதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சின்னதுரையின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரியும், அவரிடம் இருந்து இழப்பீடு பெற்று தரக்கோரியும், சின்னதுரையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல் மருதையான் கோவில்-அகரம் சீகூர் சாலையில் வரிசைபட்டி பிரிவு சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையில், குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்தனர். இதையடுத்து போக்குவரத்து பாதிப்பு ஒழுங்குப்படுத்தப்பட்டு சின்னத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டம்

    ஜெயங்கொண்டம், 

    பெரம்பலூர் மாவட்டம் வி. களத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறி வருவாய்த் துறையினர் சிலையை அப்புறப்படு த்தினர்.இதில் அங்கு கூடியிருந்த பொது மக்களையும் இந்து முன்னணியினரையும் போலீசார் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.மேலும் அங்கிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் குணா தலைமையில் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறி முன்னெச்சரிக்கையாக போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவி த்தும், கைது செய்யப்ப ட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும். கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு இந்து முன்னணி மாவட்ட துணை த்தலைவர் பழனிச்சாமி தலைமையில் இந்து முன்னணியினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வ லமாக நான்கு ரோட்டிற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமபாலமு ருகன், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பாண்டி யராஜன், பாக்கியராஜ், அருள், விஜய், வெற்றிச்செ ல்வன், தவமணி, ரமேஷ், ஐயம்பெருமாள், பி.எம்.ஆர் ரமேஷ், இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டு கண்டனம் கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பெரம்பலூர் அருகே ரூ.25¾ லட்சத்தை மோசடி செய்த பால் பண்ணை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
    • பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானவர் கைது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 25). இவர் அதே கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக அம்மன் என்ற பெயரில் பால்பண்ணை நடத்தி வந்தார். இளங்கோவனிடம் அந்த கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் 120 பேர் காலை, மாலை ஆகிய இருவேளைகளில் பால் ஊற்றி வந்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கொடுக்க வேண்டிய ரூ.25 லட்சத்து 78 ஆயிரத்து 945-ஐ பட்டுவாடா செய்யாமல் இளங்கோவன் ஏமாற்றி வந்தார்.

    பின்னர் அவர் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி பால் பணத்தை கொடுக்காமல் வசித்து வந்த வீட்டையும், பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானார். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுத்து தர வேண்டிய பால் பணத்தை பெற்று தருமாறு பால் உற்பத்தியாளர்கள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். சிறையில் அடைப்பு இதையடுத்து பாடாலூர் போலீசார் கடந்த 15-ந்தேதி இளங்கோவன் மீது பணம் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான இளங்கோவனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, கோபாலபுரம் கிராமத்தில் தலைமறைவாகி இருந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் பிடித்து பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்டம், துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

    • தகாத வார்த்தையால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே செங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 46). இவர் செங்குணம் கிராம ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வருகிறார். கோவிந்தன் நேற்று மாலை பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள மளிகை கடை அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை கண்ட மளிகை கடையின் உரிமையாளரின் மனைவி கோவிந்தனை வேறு இடத்துக்கு சென்று மது அருந்துமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறினார்.

    சாலை மறியல் பெண்ணை திட்டிய ஊராட்சி செயலாளர் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குணம் கிராம ஊராட்சிக்குட்பட்ட முத்து நகர், முல்லை நகரை சோ்ந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூா் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்த விவசாயி கிணற்றில் விழுந்து தவித்தார்
    • பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் அருகே எறையசமுத்திரம் காட்டு கொட்டாயை பகுதியை சோ்ந்தவர் சிவா (வயது 40), விவசாயி. இவர் நேற்று மதியம் அருகே வயலில் உள்ள கிணற்றில் இறங்கி பழுதான மோட்டாரை தூக்க சென்றார். பின்னர் அவர் கிணற்றில் இருந்து மேலே ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றுக்குள் விழுந்தார். பின்னர் சிவா கிணற்றில் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி சிவாவை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    ×