search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசாரிடம் புகார்
    • 17 வயது கல்லூரி மாணவியை வாலிபரிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • பெரம்பலூர் துறைமங்கலத்தில் கோவிலில் உண்டியல் திருட்டு போனது
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோட்டில் இருந்து கவுல்பாளையம் செல்லும் சாலையில் வீர ரெட்டியார் அம்பலக்காரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் பூட்டு நேற்று உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் கருவறையில் பொருத்தப்படாமல் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் காலனி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உதயசூரியன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வருகிறார். கோமதி மேலப்புலியூர் அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கோமதி தனது வீட்டை பூட்டி விட்டு மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் தனது அக்காளின் மருமகளுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கிருந்து நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனா். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது
    • மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அக் 20 -2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • கோவில்பாளையத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் சக்தி சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நல்ல சேவகர் அய்யனார், செம்மலயபர், ஆகாச கருப்பு, கருப்புசாமி, மதுரை வீரன், காரடையான் சங்கிலி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை , அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் துங்கபுரம், புது வேட்டக்குடி, காரைப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டார்
    • மங்களமேடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவரது மகன் தமிழரசன் (வயது 23). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள மங்கூன் பகுதியில் நாளை (12ம்தேதி) மின்தடை செய்யப்படுகிறது. பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நாளை (12ம்தேதி) நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஜெயராமன் தலைமை வகித்தார். தேவராஜன் மருத்துவமனை டாக்டர் புவனேஸ்வரி முன்னிலை வகித்து தற்கொலை எண்ணங்களை தடுப்பது குறித்து பேசினார். பின்னர் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தற்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் உதரம் நாகராஜ், லதா உட்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூரில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்
    • பெற்றோர்களை போலீசார் அழைத்த போது வராததால் காதல் ஜோடியை அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    கடலூர் மாவட்டம், விருதாச்சலம் தாலுகா, மங்களுர்பேட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் நமச்சிவாயம்(வயது 24). கோவில் சிலை செய்யும் ஸ்பதியான இவரும், அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து மகள்அனிதா (வயது 23) என்பவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அனிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் நமச்சிவாயமும், அனிதாவும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி, அவரது நண்பர்கள் முன்னிலையில், பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரடி முனியப்பன் கோவிலில், இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து நமச்சிவாயம் - அனிதா ஆகியோர் உரிய பாதுகாப்பு கோரி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ்ஸ்டேசனில் தஞ்சமடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தம்பதியின் பெற்றோர்களை விசாரணை அழைத்தார். ஆனால் பெற்றோர்கள் வரவில்லை. இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரிடம் பேசி அனுப்பி வைத்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் குழந்தை உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர்
    • பலியான சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி, 

    சென்னை புழல் காவாங்கரை பகுதியை சோ்ந்தவர் கணேசன் (வயது 32). இவருக்கு பத்மா (32) என்ற மனைவியும், தஷ்வந்த் (4) என்ற மகனும், தக்ஷித் என்ற 3 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.பத்மாவின் குடும்பத்தினரும், அவரது தங்கையும், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஷாம் சுந்தரின் மனைவியுமான மஞ்சு (28) குடும்பத்தினரும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்து விட்டு சென்னைக்கு மீண்டும் திரும்பினர். காரை கணேசன் ஓட்டினார்.

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கணேசனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் மைய தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் கணேசன், அவரது மனைவி பத்மா, அவர்களுடைய 2 குழந்தைகள், ஷாம் சுந்தர், மஞ்சு, அவர்களுடைய குழந்தைகளான சிவானி (5), சக்தி (2) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர்.இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசனின் 3 மாத கைக்குழந்தை தக்ஷித் பரிதாபமாக இறந்தான்.

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணம் புதுக்காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40) லாரி டிரைவர். இவருடைய மகன் பரணி (6) .

    நெற்குணம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்த நிலையில் அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு பரணி தனது தாயுடன் சென்றான். அப்போது அங்குள்ள சாலையில் சிறுவன் பரணி விளையாடி கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியாக வண்ணாரம் பூண்டியை சேர்ந்த சரவணன் என்பவர் கரும்பு ஏற்றி ெசன்ற டிராக்டர் சிறுவன் பரணி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான்.

    பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 61), விவசாயி. இவர் அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலில் புல் அறுக்க நடந்து சென்றார்.அப்போது ராமகிருஷ்ணன் வயல் பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மின்சார ஒயர் அறுந்து தொங்கி உள்ளது.இதை கவனிக்காத கண்ணன் அதனை மிதித்துள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இதேபோல் ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (43), எலக்ட்ரீசியன். இவர் அதே பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அழகுராஜ் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு காரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகுராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மங்களமேடு சுங்கச்சாவடியில் தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்
    • கனரக வாகன கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பல அச்சு கொண்ட கனரக வாகனங்களுக்கு கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவா அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு, சுங்கச்சாவடி முன்பு திரண்டு சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • அரசு மருத்துவமனை டாக்டர் மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது
    • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் ஸ்டீபன் சாம்ராஜ் என்பவரது சார்பில், அவரது ஆதரவாளர்கள், வக்கீல்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, தற்போது அதே மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் ஒருவர், நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு மன உளைச்சல் தரும் வகையில், சாதி பெயரை சொல்லி திட்டி அவமானப்படுத்தி, போலீஸ் உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டி, செய்யாத குற்றத்தை செய்ததாக எழுதி வாங்க முயற்சித்து வருகிறார். மேலும் அவர் கொலை மிரட்டல் விடுத்ததால் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நர்ஸ் ஸ்டீபன் சாம்ராஜுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் கிடைக்க வேண்டும். மேலும் அந்த டாக்டரிடம் உரிய விசாரணை நடத்தி, அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. புகார் மனுவினை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ×