search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்காக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள், அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து, முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் சிலைகள் வைத்தல் கூடாது என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பணி வழங்கக்கோரி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • ஐகோர்ட்டு உத்தரவின்படி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் லோகலெட்சுமி தலைமையில் செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் நிரந்தர தன்மையுடைய பணி ஆணையை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே அத்தியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், கருப்புசாமி, திரவுபதி அம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு கிராமத்தில் அமைந்துள்ள மங்கள விநாயகர், மங்கள மாரியம்மன், கரைமேல் அழகர், பெரியசாமி, கருப்பையா ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பள்ளி கல்வித் துறையின் சார்பில்

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முதன்மையாக "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையிலும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வு நடைபெற்றது. எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வானது பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத உடைந்த நற்காலிகள், மேசைகள், இ-கழிவு, மரக்கிளைகள், பழைய உபகரணங்கள், கட்டிட உடைந்த துண்டுகள் போன்றவற்றை நிரம்பி இருப்பதை அப்புறப்படுத்தி பள்ளியை தூய்மை செய்யும் வகையில் இந்நிகழ்வு செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வானது பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பள்ளி தூய்மை உறுதி மொழியினை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாணவ-மாணவிகள் ஏற்று கொண்டனர். அப்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நிகழ்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மஞ்சப்பை, துணிப்பைகளை வழங்கினார்.

    • நூற்றாண்டு பழமை வாய்ந்தது
    • பஞ்சநதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவில் பாழடைந்து சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்த கோவிலை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலையூர் கிராம மக்கள் வேறு ஒரு இடத்தில் புதிய சிவன் கோவில் கட்ட முடிவு செய்து அதன்படி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வந்த சிவனடியார்கள் பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினார்கள்.

    • 7-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடக்கிறது
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • பிளஸ்-1 படித்து வந்தார்
    • கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (வயது 16). ரித்திஷ் (12) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். பாஸ்கர் சவுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பெரம்பலூரில் தனியார் பள்ளி ஒன்றில் விஷால் பிளஸ்-1-ம், ரித்திஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று காலை சசிகலா அதே பகுதியில் உள்ள தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்க மகன் விஷாலுடன் சென்றுள்ளார். அங்கு மருந்தில் கலக்குவதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்து வர விஷால் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது விஷால் கால் தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் விஷால் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாயார் கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றுமாறு கதறி அழுதவாறு வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து விஷாலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷால் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி வீட்டில் 20 பவுன் நகை களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி தேவகி (40). இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர். பின்னர் வயலில் வேலையை முடித்து விட்டு மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு சென்றனர்.

    இதையடுத்து வீட்டின் அருகே உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்கு செல்வதற்காக தேவகி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்றார். அப்போது அங்கு வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேவகி அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    • ஆசிரியர் கொலை வழக்கில்

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் பெரம்பலூர் ஸ்ரீபுரந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 5-ந் தேதி செல்வராஜ் இருசக்கரவாகனத்தில் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    உடையார்பாளையம் சோழன்குறிச்சி பிரிவு சாலையில் வந்த போது ஜெயங்கொண்டம் காமராஜ்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர் செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இன்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.

    • வாகன விபத்தில் விவசாயி பலியானார்.
    • மொபட் மீது கார் மோதியது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 74), விவசாயி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு சாலை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • போலீஸ் சார்பில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தில் போலீசார் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு வளவன் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

    • 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

    பெரம்பலூர்

    திருமானூர் அருகே குருவாடி கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையே செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் நில அளவிடும் பணிைய அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதற்கு குருவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    கிராம மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான சுயராஜன் (வயது 52), மகேந்திரன் (41) ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 63 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×