search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. நகர செயலாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    அ.தி.மு.க. நகர செயலாளர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

    • நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓட்டம்.
    • போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் விசாரணை.

    தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க., நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் இரண்டுமே சின்னமனூர்-குமுளி நெடுஞ்சாலையில் உள்ளது.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளில் நெருப்பை பற்ற வைத்து வீசினர். அப்போது பயங்கர சத்தம் கேட்டு முன் பகுதி தீ பிடித்தது. இதைப் பார்த்ததும் அங்கிருந்த பிச்சைக்கனி அலுவலகத்தின் காவலாளி மாரியப்பன் அவர்களை துரத்தி பிடிக்க முயன்றார்.

    ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பிச்சைக்கனி மற்றும் அருகில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து ஓடிவந்தனர்.

    மேலும் இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் பிச்சைக்கனி புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏ.எஸ்.பி. சுப்பிரமணிய பால சுந்தரா, போடி டி.எஸ்.பி. பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    இதனிடையே பிச்சைக்கனி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் ஓடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    பிச்சைக்கனி ஓ.பி.எஸ். அணியில் இருந்து கடந்த 1 வருடத்துக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு நகரச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போது முதல் கட்சியில் உள்ள ஒரு சிலருக்கும், இவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக நிறுவனங்கள் அதிக அளவு செயல்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்கள் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவ்வித பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. இச்சம்பவம் சின்னமனூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×