search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கம்: நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
    X

    சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் 110 கி.மீட்டர் வேகத்தில் இயக்கம்: நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

    • வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.
    • வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    கோவை:

    கோவை-சென்னை இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையை நாளை (8-ந் தேதி) மாலை பிரதமர் மோடி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.

    இதற்கிடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரத்தையும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதன்கிழமையை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரெயில் இரவு 10 மணிக்கு கோவை ரெயில் நிலையத்திற்கு வருகிறது.

    பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு கோவையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரெயில் (ரெயில் எண்:20644) புறப்படுகிறது.

    இந்த ரெயில் 6.35 மணிக்கு திருப்பூர், 7.12 மணிக்கு ஈரோடு, 7.58-க்கு சேலம், 9.35-க்கு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று, பின்னர் முற்பகல் 11.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-கோவை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (20643) மதியம் 2.25 மணிக்கு புறப்படுகிறது. 4.40 மணிக்கு ஜோலார்பேட்டை, 5.48 மணிக்கு சேலத்துக்கும், 6.32க்கு ஈரோடு, 6.13 மணிக்கு திருப்பூர் வந்து, இரவு 8.15 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தை வந்தடைகிறது.

    இந்த வந்தே பாரத் ரெயிலின் பயண நேரம் 5 மணி நேரம் 50 நிமிடங்கள்.

    வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் நேரம் அறிவித்ததை அடுத்து இன்று முதல் முன்பதிவும் தொடங்கியுள்ளது. இந்த ரெயிலில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால் இன்று காலை முதலே முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    கோவை-சென்னை இடையே நாளை முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல் நிலை இருக்கைகளும் உள்ளன.

    முதல் நிலை இருக்கைக்கு ரூ.2,310-ம், இரண்டாம் நிலை இருக்கைக்கு ரூ.1215 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. வந்தே பாரத் ரெயில் 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும்.

    தற்போது இந்த ரெயிலில் பயணிப்பதற்கான முன்பதிவுகள் தொடங்கி உள்ளது. பயணிக்க விரும்புவோர் இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

    புதன்கிழமையை தவிர வாரத்தில் 6 நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படும். இந்த ரெயிலின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் கோவையிலேயே நடக்கும். பயணிகளின் வரவேற்பை பொறுத்து பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் சோதனை ஓட்டம் 2 கட்டமாக நடந்தது. கடந்த 30-ந் தேதி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.20 மணிக்கு கோவைக்கு வந்தது.

    முதல் சோதனை ஓட்டத்தின்போது சுமார் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் வந்தே பாரத் ரெயில் கோவை வந்தது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது கட்டாக சோதனை ஓட்டம் நடந்தது. காலை 5.40 மணிக்கு புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கோவைக்கு வந்தது. 2 கட்டமாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டங்களும் வெற்றியடைந்தது.

    Next Story
    ×