search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுத்தடுத்து 2 இடங்களில்  வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகை, பணம் திருட்டு
    X

    அடுத்தடுத்து 2 இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகை, பணம் திருட்டு

    • பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், கண்ணண்டஹள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 60). இவரது கணவர் ராமச்சந்திரன். இவர் பெங்களூர் பகுதியில் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சித்ரா கெட்டம்பட்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று சித்ரா அவரது கணவரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்றார் . அதனை அறிந்த மர்ம நபர்கள் அன்று நள்ளிரவு சித்ராவின் வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணத்தை திருடி சென்றனர்.

    மறுநாள் காலை சித்ராவுடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சித்ரா வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், 750 கிராம் வெள்ளி நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சித்ரா மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கெட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுரப்பன் (வயது 65). இவருடைய மனைவி தவமணி(60). இந்த தம்பதியினருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர்.

    இவர்கள் பெங்களூர், ஓசூர் பகுதியில் சுவிட் கடையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக வீட்டில் இருந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வயதான தம்பதியினர் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அங்கு வந்த மர்ம நபர்கள் இவர்கள் இருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு, அருகே உள்ள மற்றொரு அறையின் பூட்டை உடைத்து பீரோவில இருந்த தங்க நகைகளை திருடி சென்றனர்.

    மறுநாள் காலை கவுரப்பன் எழுந்து கதவை திறந்து பார்த்தபோது கதவின் வெளியே பூட்டு போடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து வெளியே வந்து அருகே இருந்த அறையை திறந்து பார்த்தபோது போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை சோதனை செய்ததில் அதில் இருந்த 14 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கவுரப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், தடவியல் நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் இப்பகுதியில் ஒரே நாளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை பணம், திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×