search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

    • பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்திருந்தனர்.
    • அனுமதியின்றி சிலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டனர். இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ, ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் தெரிவித்திருந்தனர்.

    வழக்கமாக குடைபாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைத்து பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நடைமுறை உள்ள நிலையில் போலீசார் அனுமதி மறுத்ததால் இந்துமுன்னணி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை பாறைப்பட்டி காளியம்மன் கோவிலில் விநாயகர் சிலையை வைத்து வழிபட இந்துமுன்னணி நிர்வாகிகள் எடுத்து வந்தனர்.

    அதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.சிலையை வைத்து வழிபாடு மட்டும் செய்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்காத இடத்தில் சிலை வைக்ககூடாது என்று தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி தலைைமயில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் விரைந்து வந்தனர். அவர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலையை கைப்பற்றி ஒரு வேனில் ஏற்றி கோட்டை குளத்தில் உள்ள தொட்டியில் கரைத்தனர். அனுமதியின்றி சிலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. தொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் நகர் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Next Story
    ×