search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகை- ஆதார் எண்ணை பதிவு செய்ய உத்தரவு
    X

    பிரதமர் விவசாய உதவி திட்டம்

    விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித் தொகை- ஆதார் எண்ணை பதிவு செய்ய உத்தரவு

    • நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
    • ஆதார் எண்ணை பதிவு செய்தால் மட்டுமே 12வது தவணைத் தொகை கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது மத்திய அரசின் 100% பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000/- வீதம் ஆண்டிற்கு ரூபாய் 6,000/- மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை, 38.24 இலட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 11 தவணைகளாக நேரடி மானியமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மத்திய அரசு 12-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது.

    அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணைத் தொகைகளும் பயனாளியின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    எனவே, அனைத்து பி.எம்.கிசான் திட்டப் பயனாளிகள் அனைவரும் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு வரும் ஒ.டி.பி. பெற்று அதைப் பதிவு செய்து ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பொது சேவை மையங்களில் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தும் பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    அடுத்த 12 வது தவணைத் தொகையானது பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே, இதுவரை பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யாத பயனாளிகள் அனைவரும் கட்டாயமாக ஆதார் எண்ணை பி.எம்.கிசான் வலைதளத்தில் புதுப்பித்து தொடர்ந்து பயனடையுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக மாநில வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×