search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே கோவில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    கோவில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை படத்தில் காணலாம்.

    சிவகிரி அருகே கோவில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    • இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் உண்டியல் சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.
    • அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்தரவாதம் அளித்திருந்தனர்.

    சிவகிரி:

    இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    கோவில் உண்டியல்

    விடுமுறை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள் திரளாக வருகை தந்து கிடா வெட்டி, முடி காணிக்கை செலுத்தி, பொங்கலிட்டு வழிபட்டு வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, காணிக்கை செலுத்துவதால் இக்கோவில் உண்டியல் நிரம்பி விடுகிறது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கேசவராஜன், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகன், எழுத்தர் குமார் மற்றும் உண்டியல் பணத்தை எண்ணும் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஆகியோர் காளியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் மீதுள்ள சீலை அகற்றி பணத்தை எண்ணிக்கை செய்ய முயன்றனர்.

    அடிப்படை வசதிகள்

    இது குறித்து தகவல் அறிந்த தேவிபட்டணம் ஊராட்சிமன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. கிளைச்செயலாளர் முருகன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் முருகனிடம், கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, சுகாதாரமான குடிநீர் மற்றும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகள், கோவிலை சுற்றிலும் சுத்தமாக வைத்திருத்தல் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம்.

    அப்போது அடுத்த முறை அடிப்படை வசதிகள் செய்து தந்த பின்னர்தான் கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து செல்வோம் என உத்த ரவாதம் அளித்திருந்தனர். இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து தராமல், உண்டியல் பணத்தை எடுத்து செல்ல வந்துள்ளீர்கள்.

    எனவே உண்டியல் பணத்தை எண்ணக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் அகற்றிய உண்டியலின் மீது மீண்டும் சீல் வைத்தனர். இனிமேல் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் உண்டியல் பணத்தை எடுக்க வரமாட்டோம் என்று உறுதி அளித்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், ஊராட்சி மன்ற 12 வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×