search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு- பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு- பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    • ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    • போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார்.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த ரெட்டேரி, எம்.ஜி.ஆர். நகரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இந்த இடத்தை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுபற்றி ஏற்கனவே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற அதிகாரிகள் ஜே.சி.பி.எந்திரத்துடன் வந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

    அதிகாரிகள் வருவதை கண்டதும் ஆக்கிரமிப்பாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதம் செய்தனர். வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெண்கள் உள்பட 8 பேர் தங்களது உடலில் மண்எண்ணை மற்றும் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தும், போதிய அவகாசம் அளித்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. பொது மக்களிடம் கோட்டாட்சியர் இப்ராகிம், உதவி பொறியாளர் தயாளன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஜே.சி.பி.எந்திரத்தால் உடைத்து அகற்றும் பணி தொடங்கியது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×