search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காலி குடங்களுடன்  பொதுமக்கள் சாலைமறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு
    X

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். அணிவகுத்து நின்ற வாகனங்கள்.

    காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் - போலீசாருடன் தள்ளுமுள்ளு

    • 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • காங்கயம் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே உள்ள அவினாசிபாளையம் வண்ணாந்துறைபுதூர் பகுதியில் வி.ஜி.வி.கார்டன் குடியிருப்பு உள்ளது.இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்நாச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் அங்குள்ள காங்கயம் சாலையில் திடீரென காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவினாசிபாளையம் போலீசார் மற்றும் நாச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இல்லாததால் மாணவர்கள், குழந்தைகள்என அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளோம். விநியோகிக்கப்படும் குடிநீரும் துர்நாற்றத்துடன் வருகிறது. எனவே சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரமாக நீடித்த மறியல் காரணமாக காங்கயம் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    Next Story
    ×