search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேச்சு
    X

    தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும்-குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேச்சு

    • தமிழக அரசின் வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் பெற்று பயனடைய வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு பேசினார்
    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 807.10 மி.மீ. ஆகும். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இயல்பான மழையளவான 73.30 மி.மீ.க்கு 80.05 மி.மீ அளவு மழை பெறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் வரையில் 6.75 மி.மீ. கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. பயிர்ச் சாகுபடி விவரம் 2022-2023ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய நெல் 101375 எக்டேர் பரப்பளவிலும், சிறுதானியங்கள் 2156 எக்டேர் பரப்பளவிலும், பயறு வகைப் பயிர்கள் 4800 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து 14374 எக்டேர் பரப்பிலும், கரும்பு 2256 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 452 எக்டேர் பரப்பளவிலும் மற்றும் தென்னை 12584 எக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    இடுபொருட்கள் இருப்பு மாவட்டத்திலுள்ள 33 வேளாண்மை விரிவாக்க மையங்களில் 31.907 மெ.டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 36.310 மெ.டன் பயறு விதைகளும், 2.037 மெ.டன் நிலக்கடலை விதைகளும், 5.336 மெ.டன் சிறுதானிய விதைகளும், 0,048 மெ.டன் எள் விதைகளும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்திடத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ஆம் ஆண்டில் 85 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு 68 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 1102 ஏக்கர் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதால் 1374 விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்.

    2021-22 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட 68 தரிசு நிலத் தொகுப்புகளைப் பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, 47 தரிசு நில தொகுப்புகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராமப் பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 79 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட 79 தரிசு நில தொகுப்பில் 39 தொகுப்புகள் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு ஒரு தொகுப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசு நில தொகுப்புகளில் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் உரம் இருப்பு விவரம், மானியத் திட்டங்கள், மானிய முன்பதிவு, உதவி வேளாண்மை அலுவலர் வருகை குறித்த தகவல், வானிலைச் செய்திகள், பயிர்க் காப்பீட்டு விவரங்கள் உள்ளிட்ட 21 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×