search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதிய விலை இல்லாததால்  முள்ளங்கி தோட்டத்தை டிராக்டரை விட்டு அழித்த விவசாயி
    X

    போதிய விலை இல்லாததால் முள்ளங்கி தோட்டத்தை டிராக்டரை விட்டு அழித்த விவசாயி

    • விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
    • தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் கடுமையாக விலை சரிந்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டி ப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 40 முதல் 45 நாட்களில் அறுவடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

    இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது.

    இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் காரிமங்கலம், கொட்டு மாரண்டஅள்ளி, பாலக்கோடு, மாரண்ட அள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் முள்ளங்கி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.25 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்ததால் கடுமையாக விலை சரிந்துள்ளது.

    விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.2 முதல் 3 ரூபாய் வரை விலைக்கே வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்கவில்லை என கொட்டுமாரண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவர் தான் விவசாய நிலத்தில் விளைவித்த முள்ளங்கியை ஆடுகளை விட்டு மேய வைத்து பின்னர் டிராக்டரை வைத்து உழுது விவசாய நிலத்திலேயே முள்ளங்கியை அழித்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, பல ஆண்டுகளாக முள்ளங்கி சாகுபடி செய்து வருகிறேன். வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாய நிலத்திலேயே முள்ளங்கியை விலை பேசி எடுத்து செல்வர்.

    கடந்த மாதம் ஒரு ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்தேன். விதை முதல் நடவு கூலி வரை ஏக்கருக்கு 55 ஆயிரம் ரூபாய் செலவாகியது. திடீரென வியாபாரிகள் முள்ளங்கியை கிலோ 2 ரூபாய் முதல் 3 ரூபாய்க்கு விலைக்கு கேட்பதால் அறுவடை கூலி கூட வராததால் ஆடுகளை வைத்து மேய்த்து டிராக்டரை வைத்து ஓட்டி நிலத்திலேயே அழித்துவிட்டேன். இந்த முள்ளங்கியை அழிப்பதற்கு 3000 ரூபாய் செலவு செய்துள்ளேன்.

    தற்பொழுது மாற்று பயிர் வைப்பதற்காக முள்ளங்கியை அழித்து நிலத்தை பதப்படுத்தி வருகிறேன். விவசாயி ஆகிய எங்களிடம் எடுத்து செல்லும் முள்ளங்கியை வியாபாரிகள் மார்க்கெட்டில் கிலோ 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். உழைக்கும் விவசாயிக்கு உழுத கூலியே இல்லை என வேதனை அடைந்தார்.

    Next Story
    ×