search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொதுமக்களை சந்தித்து குறைகேட்ட கலெக்டர்
    X

    பொதுமக்களிடம் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் குறைகளை கேட்டறிந்தார்.

    பொதுமக்களை சந்தித்து குறைகேட்ட கலெக்டர்

    • கமுதி யூனியனில் வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ கோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன்அச்சங்குளம் ஊராட்சி காடநகரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்

    ரூ. 511.25 லட்சம் மதிப்பீட்டில் பார்த்திபனூர்-கமுதி ரோடு முதல் நகரத்தார்குறிச்சி வழியாக அபிராமம் வீரசோழன் சாலை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நகரத்தார் குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 1.60 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட நூலகக் கட்டடப் பணியினையும், மண்டல மாணிக்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் பொது சுகாதார வளாக கட்டடப் பணியினையும் பார்வையிட்டார்.

    கமுதி யூனியன் கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார். பின்னர் கோடாங்கிப்பட்டி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பூமாலைப்பட்டி கிராமத்தில் இருந்து கோடாங்கிப்பட்டி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி மற்றும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என கிராம மக்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு பொது இடங்களில் மரம் வளர்த்து பசுமை கிராமமாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    பின்னர் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து எவ்வளவு நாட்களில் தீர்வுக்காணப்படுகிறது? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    முன்னதாக கமுதி அரசு மருத்துவமனையிலும் கலெக்டர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ கோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×