search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள்
    X

    மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் மண் வளத்தை பாதுகாக்க கோடை உழவு செய்யுங்கள் என விவசாயிகளுக்கு உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.
    • பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று உதவி இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சித்திரை மாத புழுதி, பத்தரை மாற்றுத் தங்கம். சித்திரையில் மழை பெய்தால் பொன் ஏர் பூட்டலாம் என்று பழமொழிகள் கூறுகின்றன. கோடை மழையை பயன்படுத்தி மானாவாரி நிலத்தில் சரிவிற்கு குறுக்காக கடைசி உழவு அமையுமாறு உழுவதே கோடை உழவு ஆகும்.

    இதனால் மழை நீர் மண்ணுக்குள் இழுக்கப்பட்டு நீண்ட காலம் தேங்கி மண்ணின் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. நெல் அறுவடைக்கு பின் களிமண் சுருங்குவதால் ஆழமான வெடிப்பு ஏற்பட்டு நிலத்தின் அடிமண் ஈரம் ஆவியாகிறது.

    4 அல்லது 5 மாதங்கள் கழித்து இந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய நீர் பாய்ச்சும்போது நீர் வேர் உறிஞ்சும் மட்டத்திற்கு கீழே சென்று விடுகிறது. நிலத்தை தயார்படுத்த அதிக அளவு கால்வாய் நீர் தேவைப்படுகிறது. நீர் விரயமாவதுடன் நிலம் தயார் செய்ய தேவைப் படும் நாட்களும் அதிகமாகின்றன.

    இவற்றை எல்லாம் நீக்கி மண் வளத்தை காக்க நடவு நிலத்தை தயார் செய்ய நீரின் தேவையை குறைக்க, அடிமண் இறுக்கம் நீங்கி நீர் கொள்திறன் அதிகரிக்க மண்ணுக்கடியில் காணப்படும் கூட்டுப் புழுக்களை மேற்பரப்பில் தள்ளி, பறவைகளுக்கு இரையாக்கி மண்ணை உதிரியாக வைப்பதற்கு உதவுகிறது.

    கோடை உழவு செய்யாத நிலங்களில் களைகளின் பெருக்கம் அதிகமாகி, மண்ணில் உள்ள நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சி விடுகிறது. அடுத்த பயிர் சாகுபடியில் அதிக களை முளைத்து பயிர் சேதம், சாகுபடி செலவு அதிகமாகிறது.

    அருகு, கோரை, கண்டங்கத்தரி, காட்டு கண்டங்கத்தரி, பார்த்தீனியம். சாரணை, மஞ்சக்கடுகு, நாயுருவி, தொய்யாக்கீரை, பண்ணைக் கீரை களைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன. கோடை உழவு செய்வதால் இந்த களைகளின் பெருக்கம் வெகுவாக குறைகிறது.

    பயிர் அறுவடைக்கு பின் எஞ்சிய கட்டைப்பயிர் பெரும்பாலான பூச்சிகள், நோய்க்கிருமிகளுக்கும் உணவாகவும், உறைவிடமாகவும், இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் அமைகிறது. கோடை உழவு செய்வதால் இந்த கட்டைப்பயிர் உரமாகி நுண்ணுயிர்களுக்கு உணவாகி மண்வளத்தை கூட்டுகிறது.

    கோடை உழவு செய்வதால் மண்ணில் காற்றோட்டம் அதிகமாகி நுண்ணுயிர் எண்ணிக்கை பெருகி மண்வளமாகிறது. ராமநாதபுரம் மாவட்ட உழவர்கள் அனைவரும் கோடை உழவு செய்து சாகுபடி நிலங்களை வளமான நிலங்களாக மேம்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×