search icon
என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு அபாயம்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் மற்றும் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.

    சமீபத்திய மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கணவாய் ரூ.400, நண்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 என்ற அடிப்படையில் விலை இருந்து வந்தது.

    இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

    அதன்படி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் அடுத்தடுத்த சிறைபிடிப்பை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது மீன்களுக்கு உரிய விலை நிர்யணம் செய்வது தொடர்பாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
    • ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் காரணமாக மீன்பிடிக்க முடியாமல் லேசான காயங்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு தொடர்ந்து சோதனை காலமாகவே இருந்து வருகிறது. 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற முதல் நாளே பாம்பன் மீனவர்கள் 3 பேர் நடுக்கடலில் படகு மூழ்கி பலியானார்கள்.

    அடுத்தடுத்த நாட்களில் தற்போது வரை 47 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி சக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று அதிகாலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு மின்னல் வேகத்தில் இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான 6 குட்டி ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்களை பார்த்ததும் பீதியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

    ஆனாலும் மீனவர்களின் விசைப்படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் அந்த பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். அத்துடன் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் தாவிக்குதித்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இறால் உள்ளிட்ட மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதனால் பல ஆயிரம் செலவு செய்து மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் காரணமாக மீன்பிடிக்க முடியாமல் லேசான காயங்களுடன் அங்கிருந்து புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் தாக்குதலால் ஒவ்வொரு படகுக்கும் பல ஆயிரம் இழப்புடன் இன்று காலை பாதியில் கரை திரும்பினர்.

    ஏற்கனவே சிறைபிடித்த மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக இருக்கிறது என்று மீனவர்கள் வேதனையுடன் கூறினர்.

    • இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 22-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 23-ந்தேதி அதிகாலை கச்சத்தீவு, நெடுந்தீவுக்குக்கு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ரெஸ்மன், ஜஸ்டின், கெரின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். படகில் இருந்த சகாயம் (61), சந்தியா கிரிம்ஷன் (24), ஜெகன் (29), கருப்பையா (47), சுரேஷ் பாபு (40), காளிதாஸ் (30), ரூபின் (38), கண்ணன் (30), நாகராஜ் (34), ராஜேந்திரன் (39), புரூஸ்லீன், காளீஸ்வரன், ராஜ், முருகானந்தம், முத்துக்குமார், சீமோன் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்தனர்.

    இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் இன்று 22 மீனவர்களும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது ராமேசுவரம் மீனவர்களின் காவலை வருகிற 18-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலையாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமேசுவரம் மீனவர்களின் காவலை இரண்டாவது முறையாக இலங்கை கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
    • படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் நான்கு படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் படகுடன் 25 மீனவர்களை மீட்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன் தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், மீனவ சங்க நிர்வாகிகள் அலெக்ஸ், எட்வின்.டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாம்பன், தெற்குவாடி, சின்ன பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

    • 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
    • படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் வடக்கு துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில், நான்கு படகுகளுடன் 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரு மீனவர் 18 வயதிற்கு குறைவாக இருந்ததால் அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனர். மீதமுள்ள 24 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் நான்கு படகுகள் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பறிமுதல் செய்தனர்.

    இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்து பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கியும், சாலை மறியல் செய்தும் போராட்டங்களை மேற் கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு உமா தேவி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதனைதொடர்ந்து, அனைத்து நாட்டுப்படகு மீனவர் சங்கம் சார்பில் மாவட்டத்தலைவர் எஸ்.பி.ராயப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் 4 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற் கொள்ளுவது என முடிவு செய்யப்பட்டது.

    மேலும் வருகிற 5-ந்தேதி பாம்பன் பேருந்து பாலத்தை முற்றுகையிட்டு பேரணியாக மண்டபம் ரெயில் நிலையத்திற்கு சென்று சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த நிலையில், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வடக்கு துறை முகத்தில் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளருக்கு மீனவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதனால் இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்திய மீனவர்கள் என கருதி மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

    கடந்த வாரம் ராமேசுவரத்திலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே இலங்கை கடற்படையை கண்டித்தும், கைதான மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி வருகிற 5-ந்தேதி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

    இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    • தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
    • கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    எல்லைத்தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரையும், 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

    மீனவர்கள் கைது நடவடிக்கையால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர்.
    • இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் உள்நாட்டு சண்டை நடைபெற்ற காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் அகதிகளாக தொடர்ந்து படகுகளில் தனுஷ்கோடி, ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து சென்று மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்தனர். இதன் பின்னர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டும் வருகிறார்கள்.

    இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு சண்டை நிறைவடைந்த காலகட்டத்திலும் அகதிகளாக தமிழர்கள் வந்தனர். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்திலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தமிழகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதில், மீன்பிடிக்க செல்லவும், கச்சத்தீவு திருவிழாவிற்கும் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மூன்று படகுகளுடன் 22 மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இலங்கை கடற்படையினர் நடத்திய விசாரனையில் தீபன் (வயது 35), சுதாகர் (42) ஆகிய இரண்டு பேர் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வ முகாமில் உள்ள அகதிகள் என்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக விதிகளை மீறி கடலுக்கு சென்ற அவர்களிடம் மீன் பிடிக்க செல்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

    இதுகுறித்து இலங்கை அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அகதிகளை அழைத்து சென்றது குறித்தும் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் குறித்தும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

    • படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று அதிகலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இதனைதொடர்ந்து, அதே பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ரெஸ்மன், ஜஸ்டீன், கெரின் என்பவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சிறைபிடித்தனர். அதில் இருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, மூன்று படகுகளுடன் 22 மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மூன்று படகுகள் பறிமு தல் செய்யப்பட்ட நிலையில் 22 மீனவர்களை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழங்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விசாரனைக்கு பின் ஜூலை 5-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் இருந்து தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் 22 மீனவர்கள் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுருத்தி திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில், 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைதான 18 பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மூன்று தினங்களாக கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று கடற்சீற்றம் சற்றே குறைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்துள்ளனர். இவர்களுடன் 3 விசைப்படகுகளை இலங்கைக கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைதான 18 மீனவர்களும் காங்கேயன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் கைதான 18பேரும் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதால் இதற்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.
    • இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து கடற்படை முகாமிற்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் வருகை தந்தார். அங்கிருந்து கார் மூலம் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகம் சென்றார் அங்கு அவருக்கு வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.

    இதன் பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் பாக்நீரினை கடல் இந்திய-இலங்கை எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதனை தொடர்ந்து, நேற்று காலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று ஸ்படிகலிங்க தரிசனம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். இதன் பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

    பின்னர் ஹோவர் கிராப்ட் கப்பலில் மன்னார் வளைகுடா கடல் இந்திய இலங்கை எல்லையில் அமைந்துள்ள 5-ம் மணல் தீடைக்கு சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள இந்திய-இலங்கை பெயர் பலகை மற்றும் இந்திய தேசிய கொடியை பார்வையிட்டார்.

    மேலும் மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்டு வரும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். இதன் பின்னர் உச்சிப்புளி சென்று அங்கிருந்து ராணுவ விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ×