search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோளிங்கர் அருகே வாலிபர் கொலை
    X

    கைதான 4 பேரை படத்தில் காணலாம்.

    சோளிங்கர் அருகே வாலிபர் கொலை

    • 4 பேர் கைது
    • பைக் மீது வேன் உரசியதால் கடத்தி கொலை செய்ததாக வாக்குமூலம்

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(வயது 22). இசை குழு நடத்தி வந்தார். இவரும், சோளிங்கர் அடுத்த ஆயலாம்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

    பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து, பெற்றோர் ஏற்றுக்கொண்டதால் சரத்குமாரின் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தலை தீபாவளிக்காக சரத்குமார் தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றார்.

    கடந்த 24-ந் தேதி தலை தீபாவளியை கொண்டாடினர். அன்று இரவு 7 மணியளவில் சரத்குமார் தனது பைக்கிற்கு பெட்ரோல் போட மாமனார் உமாபதியுடன், சோளிங்கர் அடுத்த ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

    அப்போது, கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் 4 பைக்குகளில் வந்த 7 பேர் கும்பல் திடீரென சரத்குமாரை சரமாரியாக தாக்கியது. அப்போது, தடுக்க முயன்ற உமாபதியை சரமாரியாக தாக்கினர்.

    இதில் உமாபதி லேசான காயமடைந்தார். பின்னர், சரத்குமாரை அந்த கும்பல் பைக்கில் கடத்தி சென்று, சுமார் 2 கி.மீ தொலைவில் கூடலூர் அருகே உள்ள ஒரு மறை வான இடத்தில் வைத்து, சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

    இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஐப்பேடு பகுதியை சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக சரத்குமாரை கடத்தி சென்று கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அரக்கோணம் ஏஎஸ்பி கிரீஸ் யாதவ், அரக்கோணம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 'ஐப்பேடு பகுதியை சேர்ந்த தாமோதரன் (24), கோபி (24), அசோக் பாண்டியன் (24), துரைபாண்டியன் (23) ஆகிய 4 பேரை அரக்கோணம் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    தகராறு

    கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் ஞான கொள்ளை பகுதியில் இருந்து ஆர். கே.பேட்டை கிராமத்திற்கு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சரத்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சென்றுள்ளனர்.

    அப்போது ஐப்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்ற பைக் மீது வேன் உரசியுள்ளது. இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் வேனில் சென்றவர்கள், பைக்கில் வந்த நபர்களை தாக்கியுள்ளனர். இதில் பைக்கில் வந்தவர்களை ஆர்.கே.பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சரத்குமார் வேனில் வந்தவர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த முன்விரோத தகராறில், எதிர்தரப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் தங்களது கூட்டாளிகள் மூலம் சரத்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

    இதில் கோபி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

    Next Story
    ×