search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு முதலீட்டு கழகம் கடன் உதவிகளை வழங்குகிறது
    X

    முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு முதலீட்டு கழகம் கடன் உதவிகளை வழங்குகிறது

    • கூடுதல் தலைமை செயலாளர் பேச்சு
    • நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், மாசற்ற எரிசக்தியும், தொழில் முன்னேற்றமும் குறித்து ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கலெக்டர் வளர்மதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், எரிசக்தி வளர்ச்சி முகமை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து அதன் வாயிலாக பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறார்.

    தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில், படித்த இளைஞர்களுக்கு, முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது.

    அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 35 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. மேலும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின் ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.

    புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்து பவர்களுக்கும் பல்வேறு கடன் உதவிகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் செய்து வருகிறது. இதனை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்கழகத்தின் முக்கிய நோக்கம் கடனுதவி வழங்குவது அல்ல.

    தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் என்ஜினீயரிங் தொழிற்சாலைகள், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் அதிக அளவில் நெல் அரவை செய்யப்பட்டு வருவதால் அவர்களுடைய தொழில்கள் விரிவுபடுத்துவதற்கும் நவீன உத்திகளான சூரிய தகடுகளை பயன்படுத்தி மாசற்ற எரிசக்தி, பசுமை உற்பத்தியை பின்பற்றி தொழில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் சென்னை முதுநிலை மண்டல மேலாளர் பழனிவேல், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கிளை மேலாளர் ஜனார்தனன். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆனந்தன் மற்றும் அரிசி ஆலை சங்கம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் சங்கங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

    Heading

    Content Area


    Next Story
    ×