search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல் அறுவடை பணிகள் தீவிரம்
    X

    நெல் அறுவடை பணிகள் தீவிரம்

    • மழை குறைந்து வெயில் அடித்து வருவதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது.
    • விவசாயிகள் வங்கிக்கணக்கு ,பாஸ் புத்தகம் பெறப்பட்டு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள கல்லாபுரம், ராமகுளம் கால்வாய் பாசனத்தின் கீழ் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

    இப்பகுதிகளில் இரண்டாம் போகம் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. தொடர் மழை பெய்து வந்ததால், அறுவடை தாமதமானது. தற்போது மழை குறைந்து வெயில் அடித்து வருவதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

    விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ருத்ராபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில், அரசு நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.

    இம்மையத்தில் சன்ன ரகம் 2,160 ரூபாய்க்கும், மற்ற ரகங்கள் 2,115 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்ததால்,நெல் அறுவடை பாதித்தது. வயல்களில் அறுவடை இயந்திரம் இறக்க முடியாத அளவிற்கு நீர் தேங்கியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து, வெயில் அடித்து வருவதால் வயல்கள் காய்ந்துள்ளன.இதனால் கல்லாபுரம், பூளவாடி, மாவளம்பாறை, வேல் நகர் உள்ளிட்ட அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

    வேளாண் பொறியியல் துறை சார்பில் இப்பகுதிகளுக்கு அறுவடை இயந்திரமும் ஒதுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் நெல் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மழை குறைந்துள்ளதால் அறுவடை தீவிரமடைந்துள்ளது. கடந்த 1-ந் தேதி மையம் துவக்கப்பட்டு, 6-ந் தேதி முதல் கொள்முதல் நடந்து வருகிறது. 1,500 மூட்டை வரை நெல் வரத்து காணப்படுகிறது.அரசு கொள்முதல் மையத்திற்கு விவசாயிகள் கொண்டு வருவதற்கு முன் உரிய ஆவணங்களுடன் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    வி.ஏ.ஓ., அனுமதி கொடுத்ததும் முன்னுரிமை அடிப்படையில் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.விவசாயிகள் வங்கிக்கணக்கு ,பாஸ் புத்தகம் பெறப்பட்டு கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை உடனடியாக அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×