search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டறம்பள்ளி அருகே கலவர பூமியாக மாறிய கிராமம்- 36 பேர் கைது

    • கல்வீச்சில் சப்-கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் நாட்றம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்த 180-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் காளை விடும் விழா நடத்தப்படும் என விழா குழுவினர் நோட்டீஸ் விநியோகம் செய்திருந்தனர். இதனால் ஏராளமான காளைகள் பங்கேற்றன.

    கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின. இருபுறமும் நின்ற இளைஞர்கள் ஆரவாரம் செய்து காளைகளின் முதுகில் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த மாடு விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

    மதியம் 2.30 மணிக்கு மேல் மாடு விடும் விழா நடத்தக் கூடாது என விழா குழுவினரிடம் போலீசார் கூறினர். இதனால் மாடு விடுவது நிறுத்தப்பட்டது. அதிக காளைகள் பங்கேற்றதால் 2-வது சுற்று ஓடுவதற்கு காளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதனால் பரிசுகள் வாங்க முடியாமல் காளைகளின் உரிமை யாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆவேசம் அடைந்த ஒரு சில காளையின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை மட்டும் போட்டியில் கலந்து கொண்டு வருவதற்கு அனுமதிக்குமாறு விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    தாசில்தார் தலைமையில் அதே இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திடீரென காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அங்குமிங்கும் வேகமாக சிதறி ஓடினர். கூட்டத்தில் ஓடிய பொதுமக்களை காளை முட்டி தூக்கி வீசியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் முஷாரப் (வயது 19) என்பவரை காளை முட்டியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கல்நார்சம்பட்டி கோவில் எதிரே மறியல் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த சப்-கலெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் தங்களிடம் இருந்த வீடியோ பதிவை காட்டி வாலிபர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் நடந்த கல்வீச்சில் சப் கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.

    மேலும் போலீஸ்காரர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதனால் கல்நார்சம்பட்டி கிராமம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பலியான வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க வாலிபரின் சொந்த ஊரான பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் ஏ.டி.எஸ்.பி. புஷ்பராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பொது சொத்துகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவன் உள்பட 36 பேரை கைது செய்தனர். அவர்களை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது சிறுவன் வேலூர் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×