search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10 ஏக்கர் வாழை, கரும்பு பயிர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
    X

    10 ஏக்கர் வாழை, கரும்பு பயிர்களை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

    • வாழை மற்றும் கரும்பு பயிர்களை டிராக்டரை கொண்டு யாரோ அழிக்க முயற்சித்தது தெரிய வந்தது.
    • பயிர்களை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெள்ளப்பாக்கம் பகுதியில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தேவநாதன் உள்ளிட்ட 4 பேர் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த இடம் தொடர்பாக சுசீலா தேவநாதன் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இங்கு பயிரிடப்பட்ட வாழை மற்றும் கரும்பு பயிர்கள் மீது டிராக்டரால் உழவு செய்யப்பட்டிருந்தது. இதனை அவ்வழியே சென்றவர்கள் இன்று காலை பார்த்து, ஊராட்சி தலைவர் சுசீலாவிற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, வாழை மற்றும் கரும்பு பயிர்களை டிராக்டரை கொண்டு யாரோ அழிக்க முயற்சித்தது தெரிய வந்தது.


    தொடர்ந்து ஊராட்சி தலைவர் சுசீலா தேவேந்திரன் மற்றும் அவரது தரப்பினர் வெள்ளகேட் பகுதிக்கு திரண்டு வந்தனர். பயிர்களை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் ஆகியோரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர் விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பயிர்களை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையேற்ற ஊராட்சி தலைவர் மற்றும் அவரது தரப்பினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×