search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    விலை அதிகரிப்பால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்
    X

    ஆண்டிபட்டி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

    விலை அதிகரிப்பால் ஆண்டிபட்டி ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்

    • தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் கால்நடைகளை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    மதுரை, உசிலம்பட்டி, தேனி, கம்பம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர். தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ளதால் இறைச்சி வியாபாரிகள் ஆடு, கோழிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    ஆண்டிபட்டி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக அளவில் வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். ஆனால் ஆடுகள் விலை திடீரென அதிகரித்ததால் வாங்க தயக்கம் காட்டினர். குறிப்பாக 10 கிலோ கொண்டு ஆடு ரூ.10 ஆயிரமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. அதாவது 1 கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    புதுமண தம்பதிகள் மறுவீடு, ஊர் விருந்து ஆகியவற்றிற்கு அதிக அளவில் அசைவ உணவுகள் பரிமாறப்படும். இதனால் இறைச்சி தேவை அதிகரிப்பதால் விலையையும் உயர்த்தினர். இந்த விலையில் ஆடுகளை வாங்கிச் சென்றால் தங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் வியாபாரிகள் தயக்கத்துடன் இருந்தனர். இதனால் எப்போதும் களைகட்டி காணப்படும் தீபாவளி விற்பனை மந்தமாக இருந்தது.

    ஒருசில வியாபாரிகள் மட்டும் வேறு வழியின்றி கிடைத்த விலைக்கு ஆடுகளை வாங்கிச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல விலையை குறைத்து விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்தனர்.

    சந்தையின் நடு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிபட்டி சுற்று வட்டார கிராம மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்து சென்றனர். மழைநீரோடு கழிவு நீரும் சேர்ந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த தண்ணீரை வெளியேற்றி சந்தையை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×