search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் முதல் பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்
    X

    கோவையில் முதல் பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்

    • பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
    • காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தான் முதன் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று பிற்பகலில், தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்த போது, டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான முறையான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஷர்மிளா கூறியதாவது:-

    காலையில் கனிமொழி எம்.பி. பஸ்சில் வந்திருந்தார். அப்போது பஸ்சில் பணியாற்றிய பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

    நீங்கள் யாராக இருந்தாலும் டிக்கெட் எடுங்கள் என கூறியுள்ளார். அவர்களும் டிக்கெட் எடுத்து விட்டனர். இதனை பார்த்த நான் அவர் ஒரு எம்.பி. நீங்கள் மரியாதையாக பேச வேண்டும் என கூறினேன். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.அப்போது அவரிடம் இது தொடர்பாக தெரிவித்து கொண்டிருந்த போது, உரிமையாளர் நீ உன் விளம்பரத்திற்காக ஆட்களை கூட்டி வருவதாக தெரிவித்தார்.இது தொடர்பாக நான் ஏற்கனவே மேலாளரிடம் கனிமொழி எம்.பி வருவதை தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர் உரிமையாளரிடம் நான் சொல்லவே இல்லை என கூறி தகராறு செய்தார்.

    இதையடுத்து உரிமையாளர் எனது தந்தையிடம் உனது மகளை அழைத்து செல் என்றார். இதனால் நான் பஸ்சை விட்டு இறங்கி கொள்கிறேன் என தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×