search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி ஒருவர் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என உணர்ந்திருக்கேன் - சிவகுமார்
    X

    கல்வி ஒருவர் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என உணர்ந்திருக்கேன் - சிவகுமார்

    • சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
    • மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

    திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 44 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின் போது, சிவகுமார் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.

    தகுதியான மாணவ, மாணவிகளை அடையாளம் கண்டு, தனது அறக்கட்டளை மூலம் பாராட்டி வருகிறார். சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 45-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது.

    மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பரிசு பெற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டர். நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், "1979-ஆம் ஆண்டு, மே மாதம் தொடங்கப்பட்ட 'சிவகுமார் கல்வி அறக்கட்டளை தொடர்ந்து, ப்ளஸ் டூ தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது."

    "25 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் ஃபவுண்டேஷன் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள்."

    "கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமா உணர்ந்திருக்கேன்."

    "என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. மாணவர்கள் தங்களுடைய கவனம் சிதறாமல், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்," என்று கூறினார்.


    Next Story
    ×