search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.75 லட்சம் கள்ள நோட்டு சிக்கிய விவகாரம்: பணம் இரட்டிப்பு மோசடியில் மூளையாக செயல்பட்ட வாலிபர் கைது
    X

    ரூ.75 லட்சம் கள்ள நோட்டு சிக்கிய விவகாரம்: பணம் இரட்டிப்பு மோசடியில் மூளையாக செயல்பட்ட வாலிபர் கைது

    • பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது.
    • ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு போலீசார் கடந்த மாதம் 6-ந்தேதி நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். இதில் காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்டவர்கள் யார்? எப்படி பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் அவர் விருதுநகரில் பதுங்கி இருப்பதை அறிந்த அடிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு நேற்று அவரை கைது செய்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×