search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு 10 கிராம மக்கள் போராட்டம்
    X

    அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு 10 கிராம மக்கள் போராட்டம்

    • கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.
    • ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகள் உள்ளன. இதில் 25 ஊராட்சிகள், பேரூராட்சிகளுடன் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்கும்போது வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட பணிகள் பாதிக்கப்படும். எனவே ஊராட்சிகளை, பேரூராட்சிகளுடன் இணைக்க கூடாது என்று கூறினார்கள்.

    இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டது. ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் அமைச்சரை சந்தித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரை சந்தித்தும் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் ஊராட்சிகளை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கலெக்டர் ஸ்ரீதர் கூறியிருந்தார். இருப்பினும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தில் லீபுரம், கோவளம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, கரும்பாட்டூர், குலசேகரபுரம், நல்லூர், ராமபுரம், இரவிப்புதூர் உள்பட 10 ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு சாமிதோப்பு ஊராட்சி தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார்.

    பஞ்சாயத்து தலைவர்கள் ஜெயக்குமாரி லீன், ஸ்டெனி சேவியர், சிந்து செந்தில், தங்கமலர் சிவபெருமான், தேவி, சுடலையாண்டி நிலா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×