search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் 108 டிகிரி கொளுத்திய வெயில்
    X

    4 ஆண்டுக்கு பிறகு சென்னையில் ஜூன் மாதத்தில் 108 டிகிரி கொளுத்திய வெயில்

    • தமிழகத்தில் நேற்றும் மிக கடுமையான வெயில் வாட்டியது.
    • சென்னை உள்பட 15 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    சென்னை:

    தமிழகம், புதுச்சேரியில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    பொதுவாக அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் கொளுத்தும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அதிக அளவில் வெயில் தாக்கி வருகிறது.

    தமிழகத்தில் நேற்றும் மிக கடுமையான வெயில் வாட்டியது. சென்னை உள்பட 15 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.68 டிகிரி வெயில் சுட்டெரித்தது. சென்னை நுங்கம்பாக்கம்-107.78, திருத்தணி-106.66, வேலூர்-106.34, புதுச்சேரி-105.26, மதுரை விமான நிலையம்-104.9, மதுரை நகரம்-104.36, கடலூர்-104, நாகை-104, பரமத்திவேலூர்-103.1, சேலம்-102.38, திருச்சி-102.38, ஈரோடு-102.2, தஞ்சாவூர்-102.2, பரங்கிபேட்டை-101.84, காரைக்கால்-101.3, பாளையங்கோட்டை-101.12 வெயில் கொளுத்தியது.

    பைக்கில் சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மின்விசிறிகள் அனல் காற்றை கக்கியது. இதனால் முதியவர்கள், சிறுவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னையில் கடந்த 4 ஆண்டுக்கு பிறகு அக்னி முடிந்த பின்னர் ஜூன் மாதத்தில் 108.68 டிகிரி வெயில் கொளுத்தி உள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர். இன்று காலையிலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.

    அக்னி முடிந்தும் வெயில் தாக்கம் குறையவில்லையே என்று மக்கள் புலம்பிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் புதுவையில் சுட்டெரிக்கும் வெயிலால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் குறையாததால் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஜூன் 7-ந்தேதி புதன்கிழமை வரை 4 நாட்கள் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணம்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×