search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 226 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது
    X

    சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 226 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது

    • ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
    • தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.

    சேலம்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை மழை பொழிவு காலமாகும். சேலம் மாவட்டத்தில் 2 பருவமழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    நடப்பாண்டு சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8 மணி அளவில் சாரல் மழை கொட்டியது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், ஜங்சன், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கோரிமேடு, சீலநாயக்கன்பட்டி என மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அதன் பிறகு விட்டு விட்டு லேசான மழை தூரல் காணப்பட்டது.

    இதேப்போல் புறநகர் பகுதிகளிலும் நேற்று இரவு பரலாக மழை பெய்தது. எடப்பாடி, சங்ககரி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதில் அதிகபட்சமாக எடப்பாடி பகுதியில் 32 மி.மீட்டர் மழை பதிவானது.

    தொடர் மழையினால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் காணப்பட்டது. தற்போது இந்த மழையினால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

    ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் தொடர் மழையினால் கிளியூர் நீர் வீழ்ச்சியில் அதிக அளவில் தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறையையொட்டி காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் இதமான சீதோஷ்ண நிலையை ரசித்தபடி சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :-

    எடப்பாடி-32 , சங்ககிரி-27, சேலம்-12.90, ஏற்காடு-10.60. பெத்தநாயக்கன்பாளையம்-9, கெங்கவல்லி-6, வீரகனூர்-6, ஆத்தூர்-5, கரியகோவில்-2.

    மாவட்டம் முழுவதும் 110.50 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் பல இடங்களில் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் ஓடியது.

    கொல்லிமலையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொல்லிமலை அடிவார பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    இதேபோல் வெண்ணந்தூர் பகுதியில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்தநிலையில் 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கி 7 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளிலும், வயல்வெளிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் குளிர்ந்த காற்று வீசியது.

    ராசிபுரம் பகுதியில் லேசான மழையும், நாமகிரிப்பேட்டை, மங்களபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இரவில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழையும் பெய்தது. மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இதேபோல் திம்மநாயக்கன்பட்டி, ஆயில்பட்டி, சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை முதல் மாலை கடும் வெயிலால் பொதுமக்கள் வாடினர். பின்னர் மாலை சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மங்களபுரம்-33.20 மி.மீ, புதுச்சத்திரம்-25.30, ராசிபுரம்-26.20, சேந்தமங்கலம்-4, கொல்லிமலை செம்மேடு-27.

    ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 115.70 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    Next Story
    ×