search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பயன்பாட்டால் விபரீதம்: பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து பணம் பறித்த 3 சிறுவர்கள்
    X

    செல்போன் பயன்பாட்டால் விபரீதம்: பெண்ணின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து பணம் பறித்த 3 சிறுவர்கள்

    • கைதான 3 பேர் மீதும் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • கைதான சிறுவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 41 வயது ஆடிட்டர். இவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது 9 வயது மகன் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எனது மகனை இந்தி படிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரிடம் அனுப்பி வைத்தேன்.

    எனது மகன் தினமும் அங்கு சென்று இந்தி படித்து வந்தான். இந்தி ஆசிரியையைக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். அவன் 11-ம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு பள்ளிக்கு செல்லாமல் இருந்தான்.

    அவன் மற்றும் அவரது நண்பர்களான பி.கே.எஸ். காலனியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன், மாக்கினாம்பட்டியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஆகியோர் சேர்ந்து எனது மனைவியின் புகைப்படத்தை செல்போன் மூலம் மார்பிங் செய்து நிர்வாணமாக சித்தரித்துள்ளனர்.

    பின்னர் அந்த புகைப்படத்தை எனது மகனிடம் காட்டி இந்த படத்தை வலைதளத்தில் பரப்பி உங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவோம். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நீ எங்களுக்கு பணம் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர்.

    இதனால் பயந்து போன எனது மகன் வீட்டில் உள்ள பீரோவில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை எங்களுக்கு தெரியாமல் எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளான். வீட்டில் இருந்த பணம் திடீரென மாயமானதால் நான் பீரோவை பூட்டி விட்டேன்.

    தொடர்ந்து எனது மகனிடம் 3 பேரும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். நான் பீரோவை பூட்டியதால் பணம் எடுக்க முடியாமல் திகைத்த எனது மகன், என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்று பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்து உள்ளான்.

    இதை தொடர்ந்து வீட்டின் பீரோவில் இருந்த பணம் மாயமானதால் எனது மகன் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவனிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை என்னிடம் கூறினான். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

    எனவே எனது மனைவியின் படத்தை மார்பிங் செய்து மகனை மிரட்டி பணம் பறித்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் 3 மாணவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களது செல்போனை பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் போக்சோ, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×