search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குப்பைகள் அள்ளுவது நிறுத்தம்- தாம்பரம் மாநகராட்சியின் புதிய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குப்பைகள் அள்ளுவது நிறுத்தம்- தாம்பரம் மாநகராட்சியின் புதிய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

    • தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை 'என்று பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 50 வீடுகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக்கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்கிய பலருக்கு தாம்பரம் மாநகராட்சி விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்கு வரி வசூலித்து வரும் நிலையில், குப்பையை அந்தந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற உத்தரவை தாம்பரம் மாநகராட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×