search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை திட்டிய பா.ஜ.க நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது
    X

    அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை திட்டிய பா.ஜ.க நிர்வாகிகள் உள்பட 6 பேர் கைது

    • சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நேற்று திருப்பூரில் இருந்து ஒரு காரில் 6 பேர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வால்பாறையில் சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, இரவு 7 மணியளவில் அக்காமலை எஸ்டேட் செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த சாலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே சென்ற போது காரில் இருந்தவர்கள் தங்களது காரை சாலையில் நிறுத்தினர்.

    பின்னர் காரை விட்டு இறங்கி வெளியில் சென்றனர். 20 நிமிடங்கள் ஆகியும் அவர்கள் வரவில்லை. இந்த சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்தினால் மற்றொரு வாகனம் செல்ல முடியாது. இந்த நிலையில் அக்காமலை எஸ்டேட்டில் இருந்து வால்பாறை நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார்.

    சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே பஸ் வந்த போது, சாலையில் கார் நிற்பதை சரவணன் பார்த்தார். காரை எடுத்தால் தான் பஸ் செல்ல முடியும் என்பதால் 20 நிமிடத்திற்கும் மேலாக அங்கே பஸ் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதேபோல் சாலையின் மறுபுறமும் ஒரு பஸ் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

    சில நிமிடங்கள் கழித்து காரில் வந்தவர்கள் காரை எடுக்க வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

    காரை எடுக்குமாறு தெரிவிக்கவே, ஆத்திரம் அடைந்த 6 பேரும், அரசு பஸ் டிரைவர் சரவணன் மற்றும் கண்டக்கரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டினர்.

    இதை பார்த்த பயணிகள் வந்து, காரை எடுக்குமாறு தெரிவிக்க, பயணிகளிடமும் அவர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து காரில் வந்த 6 பேரையும், காரையும் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் பஸ் அங்கிருந்து வால்பாறை நோக்கி சென்றது. போலீசார் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த முரளி தரன்(35), சசிக்குமார்(42), துரைமுருகன்(36), வெங்கடேஷ்(25), அருண்(30), திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த கோதண்டம்(46) என்பதும் தெரியவந்தது.

    இவர்களில் முரளிதரன், சசிக்குமார் ஆகியோர் திருப்பூர் பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர்களா கவும், துரைமுருகன் திருப்பூர் பா.ஜ.க கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவராகவும், வெங்கடேஷ் பா.ஜ.க கொங்கு மண்டல இளைரணி துணைத் தலைவராகவும், அருண் திருப்பூர் மண்டல பா.ஜ.க இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இவர்கள் 6 பேர் மீதும் அரசு பஸ் டிரைவர் சரவணன், இவர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் இவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 6 பேரையும் பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×