search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் கோவிலில் கூடுதலாக பேட்டரி கார்கள்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

    • திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்

    இதைத்தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலை போன்று திருச்செந்தூர் கோவிலை தரம் உயர்த்த அறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக திருப்பதியை போன்று திருச்செந்தூரில் பக்தர்கள் அமர்ந்து சென்று தரிசனம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைப்போன்று ரூ.250 கோடி மதிப்பில் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. திருச்செந்தூர் கோவிலில் முழு அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திருச்செந்தூர் கோவிலில் ஆய்வு செய்தார். திருச்செந்தூர் கோவில் வடபுறம் மற்றும் தென்புறத்தில் 2 இடங்களில் பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரிகள் நிவாஸ்) கட்டப்பட்டு வருகிறது. அதனை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

    அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதிகளாக சென்று அங்கு நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார அலுவலகத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பக்தர்கள் வசதிக்காக செய்யப்பட்டு வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து கம்ப்யூட்டரில் வரைபடம் மூலம் அமைச்சர் சேகர்பாபுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    திருச்செந்தூர் கோவிலில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக நுழைவுவாயிலில் இருந்து கோவில் வரை பேட்டரி கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக பேட்டரி கார்களை இன்று அமைச்சர் சேகர்பாபு கொடியைசத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் பேட்டரி காரில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பயணம் செய்தனர்.

    முன்னதாக ஆத்தூரில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். தொடர்ந்து கோவிலை பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் கோவில் தெப்பக்குளத்தை சுற்றி மரம் நடவேண்டும், கோவில் பராமரிப்பிற்கான நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என அறிவுறுத்திார்.

    தொடர்ந்து அவர் ஆத்தூர் அருகே உள்ள சேர்ந்த பூ மங்கலத்தில் புகழ்பெற்ற நவக்கிரக ஆலயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    Next Story
    ×