search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஈரோடு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தது அதிமுக
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தது அதிமுக

    • ஈரோடு மாநகர எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக பதவி வகித்து வரும் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • 65 வயதான தென்னரசு இதற்கு முன்பு அதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 7-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். விஜயகாந்தின் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளர்களை அறிவிக்கப் போவதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் யாரை வேட்பாளர்களாக அறிவிப்பார்கள் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் இன்று காலை போட்டியிடும் வேட்பாளரை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 27.2.2023 அன்று நடைபெற உள்ள (98) ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு (ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்) தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் யாரை வேட்பாளராக அறிவிப்பார் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து நிற்கும் அளவுக்கு செல்வாக்கு இல்லை என்பதால் அந்த கட்சி போட்டியிடாமல் ஒதுங்கி கொள்ள முடிவு செய்துள்ளது. இதை சூசகமாக அறிவித்த தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தங்களது ஆதரவை யாருக்கு கொடுப்பது என்பதை விரைவில் அறிவிக்க உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு தமிழக பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மிகுந்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

    அ.தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் தென்னரசுக்கு கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒருமித்த ஆதரவு தெரிவித்துள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் களப் பணிகளை தொடங்கி விட்டனர். இன்று முதல் அவர்கள் பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இதற்கிடையே தி.மு.க. கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்களும் இன்று மாலை ஈரோட்டில் ஒன்று கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். அவர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த வாரம் முதல் அனைத்து கட்சிகளின் மூத்த தலைவர்களும் ஈரோட்டில் முற்றுகையிட உள்ளனர். அதன் பிறகு ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.

    இதையடுத்து தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. போலீசார் கண்காணிப்பு பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×