search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க. பெயர்- கொடியை பயன்படுத்தக்கூடாது: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போலீசில் புகார்
    X

    திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க. பெயர்- கொடியை பயன்படுத்தக்கூடாது: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக போலீசில் புகார்

    • மாநாடு நடைபெறும் பகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வழிநெடுக அ.தி.மு.க. கொடியை போன்ற தோற்றத்தில் புதிய கொடிகளை கட்டி உள்ளனர்.
    • அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொடியில் கருப்பு சிவப்பு கலருக்கு நடுவே வெள்ளை கலரில் அண்ணா படம் இடம் பெற்றிருக்கும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    இதை தொடர்ந்து தனது செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் ஆதரவாளர்களின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். நாளை மறுநாள் (24-ந் தேதி) திருச்சி ஜி.கார்னர் மைதானத்தில் 'முப்பெருவிழா' என்ற பெயரில் மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கொடி மற்றும் பெயரை ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்று அ.தி.மு.க.வினர் ஏற்கனவே, எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. திருச்சி மாநாட்டை அ.தி.மு.க. மாநாடு போலவே நடத்த திட்டமிட்டுள்ளனர். "அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அழைக்கிறார்" என்று குறிப்பிட்டு அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாடு நடைபெறும் திருச்சி ஜி.கார்னர் மைதான பகுதியில் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைத்துள்ளனர்.

    கடந்த 20-ந்தேதி மாநாட்டு பந்தலை அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதையடுத்து மாநாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநாட்டு மேடையில் அ.தி.மு.க. முப்பெரும் விழா என்று கொட்டை எழுத்தில் அச்சிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மாநாடு நடைபெறும் பகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் வழிநெடுக அ.தி.மு.க. கொடியை போன்ற தோற்றத்தில் புதிய கொடிகளை கட்டி உள்ளனர். அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொடியில் கருப்பு சிவப்பு கலருக்கு நடுவே வெள்ளை கலரில் அண்ணா படம் இடம் பெற்றிருக்கும்.

    ஓ.பி.எஸ். அணியினர் அந்த கொடியில் அண்ணாவின் கைக்கு மேலே பச்சை கலரில் வட்டமாக இரட்டை இலை சின்னத்தை அச்சிட்டு புதிய கொடியை உருவாக்கி உள்ளனர். இந்த கொடியையே மாநாடு நடைபெறும் போது பயன்படுத்தவும் மாநாட்டையொட்டி வைக்கப்பட்டுள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் பேனர்களிலும் அ.தி.மு.க. பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். தனது மாநாட்டுக்காக அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி வருவது எடப்பாடி பழனிசாமி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    இதையடுத்து ஓ.பி.எஸ். நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க. சாயலில் ஆன கொடி மற்றும் பெயரை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் தலைமையில் இன்று அ.தி.மு.க.வினர் திரண்டு போலீசில் புகார் அளித்தனர்.

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் இந்த புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர் குமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவிட்டுள்ளார். அதனை மாற்றவில்லை. திருச்சி மாநாட்டிலும் கட்சி கொடி, சின்னம் பெயரை பயன்படுத்த உள்ளதாக அறிகிறோம். அவ்வாறு செய்தால் ஓ.பன்னீர் செல்வம் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வினரின் இந்த எதிர்ப்பையெல்லாம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கண்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியே முப்பெரும் விழா மாநாட்டை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

    அதுபோன்று மாநாட்டை நடத்தி முடித்தால் அதனை சுட்டிக்காட்டி கோர்ட்டில் முறையிடவும் அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    "அ.தி.மு.க. கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது" என்று கோர்ட்டில் தடை வாங்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்திருக்கிறார்கள். விரைவில் இந்த தடை வாங்கப்படும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×