search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கியில் தீ விபத்து-  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
    X

    வங்கியில் தீ விபத்து- பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

    • தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எஸ். ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று வழக்கம் போல் பணிகள் இயங்கி வந்த நிலையில் மாலை ஊழியர்கள் வங்கியை அடைத்து விட்டு சென்று விட்டனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில் வங்கியில் இருந்து புகை மண்டலமாக வெளியே வந்து கொண்டு இருந்தது.

    இதைப் பார்த்ததும் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையில் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வங்கியை திறந்து பார்த்தனர். வங்கியின் முன்புறம் உள்ள பணம் செலுத்தும் கவுண்டர்கள், அங்கிருந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி இருந்தது.

    இதன் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என தெரிய வந்துள்ளது. வங்கியில் உள்ள பணம், நகைகள், பத்திரங்கள் ஆகியவை மற்றொரு அறையில் இருந்துள்ளது. அங்கு தீ விபத்து ஏற்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து நகர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இந்த வங்கியின் அருகேதான் மாநகராட்சி அலுவலகம், மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

    கடந்த வாரம் மாநகராட்சி அலுவலகத்திலும் இதே போல தீ விபத்து ஏற்பட்டு பொருட்சேதம் ஏற்பட்டது. அதன் அருகில் உள்ள வங்கியிலும் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இந்த வங்கிக்கு காவலாளி யாரும் கிடையாது. பாதுகாப்புக்காக சி.சி.டி.வி. கேமரா மட்டுமே உட்புறமும், வெளிப்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ளது. காவலாளி இருந்திருந்தால் தீ விபத்து நடந்த உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×